No products in the cart.
டிசம்பர் 21 – கர்த்தர் அதிசயமானவர்!
“ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு 5:9).
நீங்கள் சாதாரணமானவர்கள்தான்! ஆனால், உங்களில் வாசம்பண்ணுகிற கர்த்தரோ அசாதாரணமானவர், அற்புதங்களைச் செய்கிறவர், அதிசயமானவர்.
கர்த்தர் மனதுருக்கம் நிறைந்தவராக இருக்கிறதினால்தான் அற்புதங்களைச் செய்கிறார். அவருடைய அன்பும், பாசமும், இரக்கமும், தயவும், மனதுருக்கமும் உங்களுடைய வாழ்க்கையிலே அற்புதங்களைக் கொண்டு வருகிறது.
அதைக் குறித்து யோபு பக்தன் ஆச்சரியப்பட்டு, “அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்கிறார்” என்று சொல்லி மனபூரிப்புடன் தேவனைத் துதிக்கிறார்.
கர்த்தர் ஏன் அதிசயங்களைச் செய்கிறார்? ஏனென்றால் அவர் பெயரே அதிசயமானவர் என்பதாகும் (ஏசா. 9:6). அவருடைய பெயரே அதிசயமானதால் அவர் பூமியிலிருந்த நாட்களெல்லாம் அதிசயங்களைச் செய்தார். அவர் செய்யும் கிரியைகள் எல்லாமே அதிசயம்தான். அதிசயமான அவர் நிச்சயமாகவே உங்களுடைய வாழ்க்கையிலே அதிசயத்தைச் செய்தருளுவார்.
கர்த்தர் செய்த அதிசயங்களை வேதத்திலிருந்து தியானித்துப் பாருங்கள். வெளிச்சம் உண்டாகக்கடவது என்று சொன்னார். அதிசயமாய் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் தோன்றிற்று. இரையாதே அமைதலாயிரு என்று சொன்னார். ஆச்சரியமாய் கடலும், காற்றும் அவருக்குக் கீழ்ப்படிந்து அமைதல் உண்டாயிற்று. இவனை விட்டு புறப்பட்டு போ என்று அசுத்த ஆவிக்குக் கட்டளையிட்டார். உடனே, அசுத்த ஆவி விலகி ஓடிற்று. அவருடைய வாயின் வார்த்தைகள் எல்லாம் அதிசயங்கள். கரத்தின் கிரியைகள் எல்லாம் அதிசயங்கள். அவர் நிச்சயமாகவே உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்வார்.
அவர் உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பித்தவர். நாறிக்கிடந்த லாசருவை உயிரோடு எழுந்துவரப் பண்ணினவர். கடலின் மேல் நடந்து சென்றவர். ஐந்து அப்பம், இரண்டு மீனைக் கொண்டு ஐயாயிரம் பேரைப் போஷித்தவர். அவர் அதிசயங்களைச் செய்கிறவர். கர்த்தர் சொல்லுகிறார், “இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” (எரே. 32:27). “தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை” (லூக். 1:37) என்று வேதம் சொல்லுகிறது.
தேவபிள்ளைகளே, ஒருவேளை நீங்கள் கர்த்தர் என்னுடைய வாழ்க்கையிலும் ஒரு அற்புதத்தைச் செய்யமாட்டாரா, எனக்கு உதவி செய்து ஆற்றித் தேற்றமாட்டாரா, என்று ஏக்கத்தோடு இருக்கலாம். அற்புதங்களைச் செய்கிற தேவனை நோக்கிப் பாருங்கள். தேவனே நீர் அதிசயமானவர் என்று போற்றிப் புகழ்ந்து துதியுங்கள். கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயமாய் அற்புதத்தைச் செய்வார்.
வேதம் சொல்லுகிறது, “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்” (சங். 113:7).
நினைவிற்கு:- “நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்” (எரே. 31:25).