No products in the cart.
டிசம்பர் 15 – கர்த்தரே சுதந்தரம்!
“நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்” (எண். 18:20).
கர்த்தரே உங்களுடைய சுதந்தரம். அவரே உங்களுடைய பங்கு. அவரே என்றென்றும் உங்களோடுகூட இருக்கிறவர். அநேகர் சொத்துக்களை சுதந்தரமாக்குகிறார்கள். படிப்பையும், புகழையும் சுதந்தரமாக்குகிறார்கள். இன்னும் அநேகர் உலகத்தின் செல்வங்கள், செல்வாக்குகள், மேன்மைகளை சுதந்தரமாக்குகிறார்கள். ஆனால் கர்த்தரோ, “நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்” என்று சொல்லுகிறார்.
பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் கானானைச் சுதந்தரமாகக் கொடுத்தபோது இஸ்ரவேல் ஜனங்கள் அதன் பொருட்டு எகிப்தை விட்டுவிட வேண்டியதாயிற்று. சிவந்த சமுத்திரத்தின் வழியாக கடந்துசெல்ல வேண்டியதாய் இருந்தது. நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்திலே நடக்க வேண்டியதாயிற்று. சீனாய் மலையிலே அக்கினியிலிருந்து புதிய பிரமாணத்தை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. மாத்திரமல்ல, மேகஸ்தம்பத்தினாலும் அக்கினிஸ்தம்பத்தினாலும் வழிநடத்தப்பட வேண்டியதாயிற்று.
அதுபோலவே, நீங்கள் கர்த்தரைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டுமென்றால், முதலாவது அநித்தியமான பாவ சந்தோஷங்களை விட்டுவிட வேண்டியது அவசியம். சிவந்த சமுத்திரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற வேண்டியது அவசியம். நீங்கள் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் அபிஷேகம் பண்ணப்பட வேண்டியது அவசியம். மாத்திரமல்ல, மேகஸ்தம்பங்களாகிய வேத வசனத்தின் மூலமாகவும், அக்கினிஸ்தம்பமாகிய ஆவியானவரின் மூலமாகவும், நீங்கள் வழிநடத்தப்பட வேண்டியது அவசியம். அப்பொழுது நீங்கள் கர்த்தரைச் சுதந்தரமாகப் பெறுவீர்கள்.
ஒருவேளை இந்த வனாந்தரமான பாதையிலே பயத்தோடும், பிரதிஷ்டையோடும் கடந்து வருவது சற்றுக் கடினமாக இருந்தாலும், உங்களுக்குமுன் வைக்கப்பட்டிருக்கிற சுதந்தரமாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திக்கொண்டுச் செல்ல வல்லமையுள்ளவராக இருக்கிறார். அப். பவுல் எழுதுகிறார், “நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்” (எபே. 1:12). கிறிஸ்து உங்களுக்கு பங்கும் சுதந்தரமுமாய் இருப்பது எத்தனை பெரிய பாக்கியம்! கிறிஸ்துவை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்போது, அவருடைய எல்லா ஆசீர்வாதங்களுக்கும், கிருபைகளுக்கும் நீங்கள் உடன்சுதந்தரராய் இருக்கிறீர்கள்.
உங்களுடைய கண்கள் சுதந்தரமாகிய கர்த்தர் மேலும், பரலோக ராஜ்யத்தின் மேலும் எப்போதும் நோக்கமாய் இருக்கட்டும். அப். பவுல் எப்போதும் அந்த சுதந்தரத்தை தன் நினைவில் கொண்டவராய், அந்த சுதந்தரத்தை நோக்கி முன்னேறிச் சென்றார். அவர் எழுதுகிறார்: “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கின… பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்” (கொலோ. 1:12, 13). தேவபிள்ளைகளே, அந்த சுதந்தரத்தை நோக்கி விசுவாசத்தோடும், விடாமுயற்சியோடும் முன்னேறிச் செல்லுங்கள்.
நினைவிற்கு:- “பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து… மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்” (எபி. 10:34,35).