No products in the cart.
டிசம்பர் 13 – கர்த்தருடைய ஆவியானவர் தாமதிப்பதில்லை!
“ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்” (சங். 55:6).
புறா வேகமாக பறக்கக்கூடியது. புறாவின் இறகுகள் பார்ப்பதற்கு மென்மையாக காணப்பட்டாலும் அவை மிகவும் வலிமையுடையவை. அது தன்னுடைய சிறகுகளின் பெலத்தால் பல நாட்கள் இடைவிடாமல் பறந்து செல்லும்.
ஒருவர் சொன்னார், “புறாக்களைப் பறக்கவிட்டால், முதலாவது சூரியனுக்கு நேரே உயர எழும்பிப் பறந்து தன் திசையை அறிந்து கொள்ளும். பின்பு ஒரே குறிக்கோளோடு எங்கும் இளைப்பாறாமல், தான் அறிந்துகொண்டதிசையில் பறந்து சென்றுவிடும். இப்படிப் பல ஆயிரம் மைல்கள் பறக்கக்கூடிய புறாக்கள் இருக்கின்றன” என்றார்.
இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது பரலோகத்தின் வான்புறாவானவர் மிக வேகமாக இறங்கி வந்தார். எந்த புவிஈர்ப்பு விசையும் அந்த வேகத்தில் பூமியை நோக்கி இழுக்க முடியாது. ஆம், ஆவியானவர் வேகமானவர். துரிதமாய் இறங்கி வந்து உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர்.
அபிஷேகக் கூட்டங்களில், ஜனங்கள் மனங்கசந்து கண்ணீருடன் ‘ஆவியானவரே என்னை நிரப்பும்’ என்று கேட்கும்போது, ஆவியானவர் எத்தனை துரிதமாய் வந்து அவர்களை நிரப்புகிறார்! அதைப் பார்க்கும்போது ஆச்சரியமாய் இருக்கும். சிலரை இரட்சிக்கும் அன்றே அபிஷேகிக்கவும் செய்கிறார். சிலரை ஞானஸ்நானம் பெறும்போதே அபிஷேகத்தினால் நிரப்புகிறார். தாகமும், வாஞ்சையும் உடையவர்கள் மேல் ஆவியானவர் துரிதமாக இறங்கி வந்து தம் வல்லமையை ஊற்றிவிடுகிறார்.
மட்டுமல்ல, சீஷர்கள் தாகத்தோடும் வாஞ்சையோடும் மேல்வீட்டறையில் ஜெபித்துக் காத்துக்கொண்டிருந்தபோது, பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல ஆவியானவர் தம்முடைய செட்டைகளை அடித்து ஒவ்வொருவர் மேலும் வந்து இறங்கினார். ‘பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள்’ என்ற வாக்குத்தத்தத்தை வேகமாகவும் துரிதமாகவும் நிறைவேற்றினார்.
அப்போஸ்தலர் நடபடிகளிலே, ஆதித்திருச்சபை வளருவதற்கு ஆவியானவர் எவ்வளவு துரிதமாய் கிரியை செய்தார் என்பது குறித்து வாசிக்கலாம். ஆவியானவருடைய கண்கள் எத்தியோப்பியாவிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்த கந்தாகே மந்திரியைப் பார்த்தது. உடனே பிலிப்புவை நோக்கி “நீ ஓடிப்போய் அந்த இரதத்துடனே சேர்ந்துகொள்” என்றார். பிலிப்பு சுவிசேஷத்தை அறிவித்து ஞானஸ்நானம் கொடுத்து முடித்தவுடனேதானே ஆவியானவர் அவரை வேறு ஒரு ஊழியத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார் (அப். 8:39).
அந்தியோகியா சபையார் சுவிசேஷப் பணிக்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது ஆவியானவர் இறங்கி வந்து பர்னபாவையும் சவுலையும் தான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடச் சொன்னார் (அப். 13:2). தேவபிள்ளைகளே, உங்கள் ஜெபங்களுக்கு தாமதிக்காமல், பதில் தர ஆவியானவர் ஆவலுள்ளவராயிருக்கிறார். கேளுங்கள்! பெற்றுக்கொள்ளுங்கள்!
நினைவிற்கு:- “பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்” (யோவான் 1:32).