No products in the cart.
டிசம்பர் 11 – கர்த்தருடைய பெலன்!
“பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்” (எபி. 11:34).
இங்கே சொல்லப்பட்டிருக்கிற பெலன், விசுவாசத்தினாலே வருகிற பெலன். உள்ளான மனுஷனிலே வருகிற பெலன். அது தெய்வீக பெலன். இந்த பெலனே பலவீனத்திலே உங்களை பெலன்கொள்ளச் செய்கிறது. யுத்தத்திலே தைரியமுள்ளவர்களாகப் போராடும்படி உதவி செய்கிறது.
சரீரத்தில் நல்ல பெலசாலிகளாய் இருப்பவர்களில் அநேகர் தைரியவான்களாய் இருப்பதில்லை. இருளுக்கும், பேய் பிசாசுக்கும் அவர்கள் பயந்து நடுங்குகிறார்கள். சிறிய பிரச்சனையில்கூட சோர்ந்துபோய்விடுகிறார்கள். தைரியமற்ற கோழைகளாய் வாழுகிறார்கள். கர்த்தரை அவர்கள் சார்ந்திருக்காமல் இருப்பதே இதற்குக் காரணம்.
ஆனால், கர்த்தர் ஒரு மனுஷனை பெலப்படுத்துகிற விதம் என்ன? முதலாவது அவனுக்கு விசுவாசத்தை ஊட்டி, பலவீனத்திலே பெலன்கொள்ளச் செய்கிறார். தெரிந்துகொள்ளும்போதுகூட பலவீனர்களையே தெரிந்துகொண்டு, பெலனுள்ளவர்களை வெட்கப்படுத்துகிறார். நீங்கள் பலவீனமாய் இருந்தாலும் கர்த்தருடைய சமுகத்திற்குள்ளாகக் கடந்து வாருங்கள். அவர் உங்களை பெலப்படுத்தி பயன்படுத்துவார்.
அப். பவுல் பலவீனராய் இருந்தார். சரீரத்தில் ஒரு முள் அவரை குத்திக் கொண்டிருந்தது. அவருடைய தோற்றமும் பலவீனம் என்று மற்றவர்கள் சொன்னார்கள் (2 கொரி. 10:10). ஆனால், கர்த்தரோ பவுலைத் தனக்கு வைராக்கியமான சாட்சியாக நிற்கும்படி பலப்படுத்தினார். அப். பவுல் “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும் பிரியமாய் இருக்கிறேன்” (2 கொரி. 12:10) என்று சொல்லுகிறார்.
மட்டுமல்ல, அவர் மிகுந்த சந்தோஷமாய் “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13) என்று சொல்லுகிறார். நீங்கள் விசுவாசத்தைப் பூரணமாய் கர்த்தரில் வைக்கும்போது உங்கள் உள்ளான மனுஷனிலே தேவனுடைய பெலத்தை நீங்கள் காண்பீர்கள். வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்” (சங். 29:11).
இன்னொரு பெலத்தையும் கர்த்தர் உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். அது உன்னத பெலன். அது பரிசுத்த ஆவியினால் வருகிற பெலன். இயேசு சொன்னார், “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள்” (அப். 1:8).
ஆகவே உன்னதத்திலிருந்து வருகிற பெலனால் தரிப்பிக்கப்படுங்கள் (லூக்கா 24:49). “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ…கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்” (ஏசா. 40:31). அவர்கள் புது பெலன் அடைவார்கள். தேவபிள்ளைகளே, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுங்கள். புதிய பெலனை, உன்னத பெலனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே” (சங். 18:32).