No products in the cart.
டிசம்பர் 10 – கர்த்தருடைய நாமம்!
“அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது” (அப். 3:16).
உங்களுக்கு இருக்கக்கூடிய மகாபலம் என்பது கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் நாமமே உங்களைப் பலப்படுத்துகிறது. கிறிஸ்துவின் நாமம் உங்களுக்குத் தரிப்பிக்கப்பட்டிருக்கிறபடியால், நீங்கள் பெலன்கொண்டு கர்த்தருக்காகப் பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.
ஒரு நாள் அப். பேதுருவும், யோவானும் தேவாலயத்துக்குப் போகும்போது, அங்கே தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாய் இருந்த ஒரு மனுஷனைக் கண்டார்கள். அவன் கால்களிலே பெலன் இல்லை. வாழ்க்கையை சிறப்பாய் நடத்துவதற்கு வருமானமும் இல்லை. தள்ளாடிய முழங்கால்களோடு வேதனைப்பட்டுக்கொண்டிருந்தான். அவனிடம் பேதுரு, “வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது” (அப். 3:6, 7).
இந்த அற்புதத்தைக் கண்டு பிரமித்து நின்ற இஸ்ரவேலரைப் பார்த்து பேதுரு, இயேசு கிறிஸ்துவினுடைய நாமமே இவனை பெலப்படுத்தினது என்ற இரகசியத்தை அவர்களுக்கு அறிவித்தார் (அப். 3:16). அப். பவுலும்கூட என்னைப் பெலப்படுத்துகிறவர் கிறிஸ்து என்றுதான் முழங்கினார்.
பார்வோன் பெரிய சேனையோடும், இரதங்களின் பெலத்தோடும் இஸ்ரவேலரைத் துரத்திக் கொண்டு வந்தான். எந்த ஆயுதமுமில்லாத இஸ்ரவேலரால் நிச்சயமாகவே அவர்களை எதிர்த்திருக்க முடியாது. ஆனால் அவர்கள் கர்த்தரிலே பெலன் கொண்டார்கள். மோசே தன்னுடைய கோலை நேராய் நீட்டியபோது சிவந்த சமுத்திரம் பார்வோனையும், அவனது சேனையையும் மூடிக் கொண்டது. அப்பொழுது மோசேயும், மிரியாமும் “கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன்” (யாத். 15:2) என்று பாடித் துதித்தார்கள்.
கர்த்தருடைய நாமத்தை விசுவாசித்து, அறிக்கை செய்து “இயேசு கிறிஸ்து” என்று சொல்லிக் கொண்டே இருங்கள். என் நாமத்திலே எதைக் கேட்டாலும் அதைச் செய்வேன் என்று அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். அவருடைய நாமம் உங்களுக்கு பலத்த துருகம். அந்த நாமத்திற்குள்ளே நீங்கள் ஓடி வரும்போது சுகமாய்த் தங்கியிருப்பீர்கள்.
தாவீது, “என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்” (சங்.18:1). “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” (சங். 18:29). “என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே” (சங். 18:32) என்றெல்லாம் பாடினார். தாவீது எப்பொழுதும் கர்த்தருடைய நாமத்தை சுதந்தரித்துக்கொண்டு அவரில் பெலப்பட்டார். தேவபிள்ளைகளே, நீங்களும் அதுபோலவே கர்த்தருடைய நாமத்தினால் பெலன் கொள்வீர்களாக. கர்த்தர் உங்களுடைய பெலனாக இருக்கும்போது, நீங்கள் அசைக்கப்படுவதில்லை.
நினைவிற்கு:- “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (சங். 46:1).