No products in the cart.
டிசம்பர் 04 – கர்த்தருடையசத்தியம்!
“அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்” (சங். 91:4).
கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிற ஆசீர்வாதங்களிலேயே பெரிதான ஆசீர்வாதம் அவருடைய சத்தியமாகும். சத்தியம் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று, சத்திய வசனம். அடுத்தது, சத்தியமாகிய இயேசு. ஒரு மனிதனுக்கு இரண்டு கண்கள் இருக்கிறதுபோல, இந்த இரண்டு சத்தியங்களும் அவனுக்கு வெளிப்பாடுகளைக் கொண்டு வருகின்றன.
வேதத்தை நாம் சத்திய வேதாகமம் என்று அழைக்கிறோம். இதிலுள்ள வார்த்தைகள் அனைத்தும் உண்மையும் சத்தியமுமானவை, அவை ஜீவனுள்ளவை. பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவை, தேனிலும், தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமானவை.
இதிலுள்ள வாக்குத்தத்தங்கள் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கக்கூடியவை. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் இதிலுள்ள வார்த்தைகள் ஒருநாளும் ஒழிந்துபோகாது. வேதத்திலே உங்களை வழிநடத்திச் செல்லக்கூடிய வாக்குத்தத்தங்களுண்டு. கால்களுக்கு தீபமும் வெளிச்சமுமான வசனங்களுமுண்டு. வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கிறவர்கள் ஒருநாளும் இடறுவதில்லை. வழி தப்பிப் போவதில்லை. அவை சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை வழிநடத்தி பூரணப்படுத்துகிறது.
இயேசு கிறிஸ்து ஜெபிக்கும்போது, “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” (யோவான் 17:17) என்று சொல்லி ஜெபித்தார். ஆம், கர்த்தருடைய வசனங்கள் பரிசுத்தமானவைகள் மட்டுமல்ல, உங்களைப் பரிசுத்தமாக்குகிறவைகளுமாயிருக்கின்றன. நீங்கள் எவ்வளவு அதிகமாய்வேதத்தை வாசித்து தியானிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களுடைய வாழ்க்கையிலே பரிசுத்தம் ஏற்படும். மட்டுமல்ல, இந்த சத்தியத்திலே உங்களுக்கு ஒரு பெரிய விடுதலையும் உண்டு. இயேசு சொன்னார், “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32).
அந்த சத்தியம்தான் உங்களுக்குப் பரிசையும் கேடகமுமாயிருக்கிறது. இது எத்தனை பெரிய ஆசீர்வாதம்! கர்த்தர் சத்தியத்தை உங்களுக்குக் கேடகமாய் வைத்திருக்கிறார். ஒரு கேடகமானது எப்படி ஒரு மனிதனுக்கு பாதுகாப்பாய் இருக்கிறதோ, அம்புகளுக்கும் ஈட்டிகளுக்கும் அக்கினியாஸ்திரங்களுக்கும் விலக்கி அவனைப் பாதுகாக்கிறதோ, அது போல கர்த்தருடைய சத்தியமும் உங்களைப் பாதுகாக்கும். இயேசுகிறிஸ்து உங்களுக்குக் கேடகமானவர். ஆகவே நீங்கள் பயப்படவோ, கலங்கவோ வேண்டிய அவசியமேயில்லை. கர்த்தரிலே சார்ந்து கொள்ளுங்கள்.
யுத்தக் களத்திலே நிற்கிற ஒரு வீரனுக்கு எப்படி ஒரு கேடகம் பாதுகாக்கும் ஆயுதமாகப் பயன்படுகிறதோ, அதுபோல சத்தியமாகிய கேடகம் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய ஆயுதமாய் இருக்கிறது. வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு போராடும்போது உங்களைப் பாதுகாப்பது சத்திய வசனமான சத்திய வேதாகமமே. அந்த வசனங்களைத்தான் மேற்கோள் காட்டி இயேசு சாத்தானை ஜெயித்தார் அல்லவா! அந்த ஜெயகிறிஸ்து உங்களுக்கும் ஜெயம் தந்தருளுவார்.
நினைவிற்கு:- “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்” (நீதி. 30:5).