No products in the cart.
டிசம்பர் 03 – கர்த்தருடையஇரக்கம்!
“அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக” (2 சாமு. 24:14).
அவருடைய இரக்கங்கள் மகா பெரியது. ஒரு முறை தாவீது தன் ஜனங்களையெல்லாம் எண்ணும்படி கட்டளையிட்டார். அது அவருடைய சுயபெலத்தை நம்புவதாய் இருந்தது. யுத்த வீரர்கள் எத்தனை பேர் என்று கோத்திரம் கோத்திரமாக எண்ணும்படி தன் தளபதியாகிய யோவாபிடம் சொன்னார். “அப்படி செய்ய வேண்டாம் இராஜாவே” என்று யோவாப் சொல்லியும் தாவீது கேட்கவில்லை. கர்த்தருடைய புயத்தை நம்பாமல் தன் வீரர்களின் பலத்தை நம்பி, ஜனங்களை எண்ணியது கர்த்தருக்கு முன்பாக பெரிய பாவமாகக் காணப்பட்டது.
கர்த்தர் அதற்குத் தண்டனையாக, மூன்று காரியங்களை முன்வைத்து ஏதாகிலும் ஒன்றைத் தெரிந்துகொள்ளும்படி தாவீதிடம் சொன்னார். ஏழு வருடம் பஞ்சம் வரவேண்டுமா அல்லது மூன்று மாதம் சத்துருக்கள் பின்தொடர நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப் போகவேண்டுமா அல்லது தேசத்தில் மூன்று நாள் கொள்ளை நோய் உண்டாக வேண்டுமா என்று கேட்டபொழுது, தாவீதினுடைய உள்ளம் கலங்கியது. அப்போது, “கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்பொழுது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக” என்றார் (2 சாமு. 24:14).
நீங்கள் ஒருபோதும் மனுஷருடைய கையிலோ, சாத்தானுடைய கையிலோ விழக்கூடாது. கர்த்தரண்டைத் திரும்புங்கள். அடித்தாலும் அரவணைக்கிறவர் அவரே. காயப்படுத்தினாலும் அவரே காயம் கட்டுகிறவர். அவருடைய இரக்கங்கள் மகா பெரியது. கர்த்தர் உங்களுடைய பாவங்களுக்குத்தக்கதாக உங்களுக்குச் சரிக்கட்டாமல் இரக்கமாய் மன்னித்து, பரிசுத்தமாய் ஜீவிக்க கிருபை தருகிறவர். வேதம் சொல்லுகிறது, “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது” (புல. 3:22,23).
நம்முடைய பாவம் பெரியதுதான். பாவத்தின் தண்டனையும் பெரியதுதான். ஆனால் கர்த்தருடைய அன்பும் இரக்கமும் அதைவிட பெரியதாக இருப்பதினால், அவர் பூமிக்கு இறங்கி வந்து தாமே நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக மாறினார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார். பாவ நிவாரண பலியாக சிலுவையிலே தன்னையே அர்ப்பணித்தார். அவரிடமிருந்து நீங்கள் இரக்கம் பெறுவது எப்படி? வேதம் சொல்லுகிறது, “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி. 28:13).
மனிதருடைய இரக்கத்திற்கு ஒரு அளவு உண்டு. ஆனால் கர்த்தருடைய இரக்கங்களுக்கோ அளவேயில்லை. மனிதர்களுடைய இரக்கங்கள் மாறிப்போகக்கூடியவை. ஆனால் தேவனுடைய இரக்கமோ, முடிவில்லாததாய்இருக்கிறது. அவருடைய கிருபையோ நித்திய நித்தியமாக விளங்குகிறது. தேவபிள்ளைகளே, கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், உங்களைக் கைவிடவுமாட்டார், அழிக்கவுமாட்டார் (உபா. 4:31).
நினைவிற்கு:- “…எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும் வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது” (சங். 123:2).