No products in the cart.
டிசம்பர் 01 – கர்த்தருடையநன்மைகள்!
“…நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!” (சங். 31:19).
நீங்கள் வாழுகின்ற இந்த உலகம் தீமை நிறைந்த அநீதியான ஒரு உலகம். உங்களிடத்தில் நன்மை பெற்றவர்களே உங்களுக்குத் தீமை செய்யும்படியாக எழுந்து நிற்கிற உலகம். ஆனால் இவற்றின் மத்தியிலும் கர்த்தர் எப்போதும் உங்களுக்கு நன்மைகளையே செய்கிறார். அவருடைய அன்பை ருசித்த தாவீது எழுதுகிறார்: “கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்” (சங். 85:12).
ஒரு முறை ஆலயம் கட்ட ஒரு நல்ல நிலம் தேடி போதகரும், விசுவாசிகளும் அலைந்தார்கள். ஒரு இடமும் சரியாய் அமையவில்லை. பல மாதங்களுக்குப் பிறகு, ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்க முன் வந்தார். ஆனால் அவர் சொல்லிய விலையோ மிக அதிகமாய் இருந்தது. அலைந்தும் திரிந்தும் நிலம் கிடைக்காத காரணத்தினால், சபை மூப்பர்களும், விசுவாசிகளும் அந்த நிலத்தையே வேறு வழியின்றி வாங்கத் தீர்மானித்தார்கள். போதகரோ முன் பணத்தைக் கொடுப்பதற்கு முன்பாக தனியாய் தேவ சமுகத்திலே போய் முழங்கால்படியிட்டு ஊக்கமாய் ஜெபம் பண்ணினார். அப்பொழுது கர்த்தர், “அவசரப்படாதே, நான் உனக்கு நன்மையானதைத் தருவேன்” என்று பேசினார். கர்த்தர் என்ன பேசினார் என்பதைப் போதகர் மூப்பர்களிடம் சொன்னபோது, அவர்கள் கடுங்கோபம் கொண்டார்கள்.
ஒரு சில மாதங்களாயின. அந்த ஊரிலுள்ள ஒரு செல்வந்தர் சபையின் போதகரை அழைத்து, “ஐயா, கர்த்தர் எங்கள் குடும்பத்தை பெரிதாக ஆசீர்வதித்ததினால் நாங்கள் குடும்பமாய் அயல் தேசத்தில் குடியேற இருக்கிறோம். எங்களுக்கிருக்கிற ஏராளமான சொத்திலே ஒரு பகுதியை உங்களுடைய ஆலயத்திற்குக் கொடுக்கிறோம்” என்று சொல்லி மிகவும் பெரிய ஒரு நிலத்தை காணிக்கையாகக் கொடுத்து விட்டுச் சென்றார். அப்பொழுதுதான் அந்த மூப்பர்களும், விசுவாசிகளும் கர்த்தர் எப்படி நன்மையான காரியங்களை நமக்குச் செய்து வருகிறார் என்பதை உணர்ந்தவர்களாய்தேவனை ஸ்தோத்தரித்தார்கள்.
தகப்பன் தன் பிள்ளைக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, தகப்பனைப் பார்க்கிலும் அதிக அன்புள்ள பரமபிதா நன்மையான நல்ல ஈவுகளை நமக்குக் கொடுக்காமல் இருப்பாரோ? நிச்சயமாகவே உங்களுக்குத் தந்தருளுவார். புத்தாண்டை நாம் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ‘உன் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் உன்னைத் தொடரும். நீ கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பாய்’ (சங். 23:6) என்று கர்த்தர் வாக்குக் கொடுக்கிறார்.
இந்த ஆண்டு உங்களுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். கண்ணீரின் பாதையிலே நீங்கள் நடந்திருக்கக்கூடும். ஆனால் நீங்கள் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவரையேசார்ந்துகொள்ளும்போது, அந்தத் துயரங்களையும், வேதனைகளையும்கூட உங்களுக்கு நன்மையாகவே மாறப்பண்ணுவார் (ரோமர் 8:28). கற்பாறையை நீரூற்றாய் மாற்றுகிறவர், வறண்டுபோன உங்களுடைய வாழ்க்கையையும் செழிப்பானதாக மாற்றுவார்.
நினைவிற்கு:- “…கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்” (எரே. 31:12).