No products in the cart.
நவம்பர் 29 – மேன்மையாக!
“…உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்” (உபா. 28:1).
கர்த்தர் உங்களை உயர்த்துகிறவர். உங்களை ஆசீர்வதிக்கிறவர். உங்களை மேன்மையாக எண்ணுகிறவர். உங்களுடைய சிறுமையின் நாட்களை, கர்த்தர் கண்ணோக்கிப் பார்த்து, அவைகளை முடிவடையும்படி செய்கிறவர்.
கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி. 12:2) என்று ஒரு மேன்மையை ஆபிரகாமுக்கு வாக்களித்தார். இந்த வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கு மாத்திரமல்ல. ஆபிரகாமின் சந்ததியும் ஆபிரகாமின் பிள்ளைகளுமாய் இருக்கிற உங்களுக்கும் உரியதாகும்.
கர்த்தர் ஆபிரகாமைப் பார்த்து, “உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்” (ஆதி. 12:3). கர்த்தரின் வார்த்தைகள் ஒருபோதும் மாறாது. வாக்குத்தத்தம் பண்ணினவர் தம்முடைய வாக்கை நிச்சயமாகவே நிறைவேற்றுவார்.
உங்களுடைய வீட்டிலும், வேலைஸ்தலத்திலும், ஊழியப் பாதையிலும், அவர் நிச்சயமாகவே உங்களை மேன்மைப்படுத்துவார். நீங்கள் தேவனை நன்றியோடு ஸ்தோத்திரித்து, உங்களுக்குள்ளே விசுவாசத்தைக் கட்டி எழுப்புவீர்களாக.
‘இன்றுமுதல் நான் மேன்மையாக வாழுவேன். நான் மகிமையாய் உயர்த்தப்படுவேன்’ என்று அறிக்கையிடுவீர்களாக. கர்த்தர் வெற்றியின் மேன்மையை உங்களுக்குத் தர விரும்புகிறார். நீங்கள் ஜெயங்கொண்டவர்களாய் விளங்கும்படி கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்து, அந்த வெற்றியின் மேன்மையை ஆசீர்வாதமாக்கிக் கொடுக்கிறார்.
உங்களுக்கு ஜெயங்கொடுக்கிற தேவன் எப்போதும் வெற்றி சிறக்கிறவர். உங்களையும் வெற்றிசிறக்கப் பண்ணுகிறவர் (2 கொரி. 2:14). இஸ்ரவேலின் சேனைகளின் முன்பாக நடந்த ஜெயகிறிஸ்துவானவர் உங்களுக்கு முன் நடப்பதினாலே, உங்கள் வாழ்க்கையெல்லாம் இனி வெற்றியுள்ளதாகவே இருக்கும்.
வெற்றியின் மேன்மையை மாத்திரமல்ல, பரிசுத்த மேன்மையையும் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்து மேன்மைப்படுத்துவார். வேதம் சொல்லுகிறது, “நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்” (உபா. 28:9).
பரிசுத்தத்தில் உள்ள மேன்மையை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. நீங்கள் பரிசுத்தமாய் இருக்கும்போது சாத்தான் உங்களை நெருங்கவே முடியாது. நீங்கள் பரிசுத்தமாய் இருக்கும்போது தேவனுடைய பிரசன்னம் ஆனந்தமாய் உங்களை நிரப்புகிறது. கர்த்தர் தம்முடைய இரத்தத்தினாலும், வேத வசனங்களினாலும், பரிசுத்த ஆவியினாலும் உங்களைப் பரிசுத்தமாக்குகிறார். தேவபிள்ளைகளே, பரிசுத்தத்திலே முன்னேறிச் சென்று மேன்மையடைவீர்களாக!
நினைவிற்கு:- “அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்” (உபா. 28:10).