No products in the cart.
நவம்பர் 27 – மூன்று சோதனைகள்!
“மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுண்டானவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்” (1 யோவான் 2:16).
மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகிய இந்த மூன்றும் சாத்தானுடைய கொடிய ஆயுதங்கள் ஆகும். இந்த மூன்று கவர்ச்சிகளைக் கொண்டுதான் அன்றைக்கு சாத்தான் ஏவாளை சோதித்தான். நன்மை தீமை அறியத்தக்க அந்த கனியை இச்சிக்க வைத்தான். வேதம் சொல்லுகிறது, “அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு… புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்” (ஆதி. 3:6).
இந்த வசனத்தை சற்று ஆழமாகக் கவனித்துப் பார்த்தால் அதில் கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை, மாம்சத்தின் இச்சையெல்லாம் இணைந்து இருப்பதைக் காணலாம். இந்த சோதனையில் ஆதாமும், ஏவாளும் விழுந்ததினாலே, தேவ சமூகத்தை இழந்து ஏதேனை விட்டு துயரத்தோடு வெளியே வர வேண்டியதாயிற்று.
இயேசுகிறிஸ்து வனாந்தரத்தில் உபவாசத்துடன் இருந்தபோது சாத்தான் இந்த மூன்று சோதனைகளையும் அவரிடத்தில் கொண்டுவந்தான். இதை மத். 4-ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். மூன்று சோதனைகளையும் அடுத்தடுத்து இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக வைத்தான். ஆனால் கர்த்தரோ ஒவ்வொரு சோதனையையும் தேவனுடைய வசனத்தினாலேயே மேற்கொண்டார். சாத்தானும் வசனத்தை உபயோகித்துப் பார்த்தான். ஆனால், கர்த்தருடைய வசனமே அவனுடைய எல்லா சோதனைகளையும் முறியடிக்கப் போதுமானதாய் இருந்தது.
சோதனைகளை மேற்கொள்ள கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை வல்லமையோடு செயல்படுத்துங்கள். சோதனை நேரத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வசனங்களை ஆவியானவர்தாமே அந்த நேரத்தில் உங்களுக்குத் தந்தருளுவார். கர்த்தர் தம்முடைய வாழ்க்கையிலும், ஊழியத்திலும், உலகம், மாம்சம், பிசாசு ஆகிய மூன்றையும் ஜெயித்தவராய் விளங்கினார்.
சோதனைகளில் ஜெயம்பெற்று, பரிசுத்தத்தைப் பாதுகாத்துக்கொண்ட நம் அருமை ஆண்டவர், உங்களுக்கும் சோதனைகளில் ஜெயம் தர வல்லவராயிருக்கிறார். பிசாசானவன், தாவீதினிடத்திலே வந்து இஸ்ரவேலரை எண்ணும்படி அவரது உள்ளத்தை ஏவினான். யூதாஸ்காரியோத்தினிடத்தில் வந்து பண ஆசையைக் கொடுத்துத் தூண்டினான். பேதுருவினிடத்தில் அவன் வந்து கோதுமையை சுளகிலே புடைப்பதைப் போல புடைத்தான். அனனியா சப்பீராளிடத்திலே வந்து பொய் சொல்லும்படித் தூண்டினான்.
தேவபிள்ளைகளே, பிசாசின் தந்திரங்கள் எவ்வளவுதான் அதிகமாக இருந்தாலும் கர்த்தர் எப்பொழுதும் உங்களுடைய பட்சத்தில் இருந்து, உங்களோடு உலாவுகிறார். உங்களுக்காக யுத்தம் செய்கிறார். உங்களைத் திடப்படுத்துகிறார்.
நினைவிற்கு:- “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்” (வெளி. 3:21).
