No products in the cart.
நவம்பர் 26 – மூன்று சாட்சிகள்!
“பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று: ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது” (1 யோவான் 5:8).
“சாட்சியிடுகிறவைகள்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் மூன்று காரியங்களைக் குறிப்பிடுகிறார். அவை ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே. அவை சுத்திகரிப்பைக் குறித்து சாட்சியிடுகின்றன. தேவ சமூகத்தில் பிரவேசிக்கத் தகுதியடைவதைக் குறித்து சாட்சியிடுகின்றன.
பழைய ஏற்பாட்டில், ஒருவன் இராஜாதி இராஜாவின் பிரசன்னத்திற்குள் செல்ல வேண்டுமென்றால், அவன் தன்னைப் பல விதங்களிலே சுத்திகரித்துக்கொள்ள வேண்டும். வேதம் மூன்று வகையான சுத்தகரிப்புகளைக் குறித்துச் சொல்லுகிறது. எண்ணாகமம் 19-ம் அதிகாரத்திலே, தண்ணீரின் சுத்திகரிப்பைக் குறித்து வாசிக்கலாம். இது சரீர சுத்திகரிப்பாகும்.
இரத்தத்தினாலே உண்டாகும் சுத்திகரிப்பு என்பது உள்ளான மனுஷனாகிய ஆத்துமாவிலே ஏற்படுகிற சுத்திகரிப்பு. உள்ளான மனுஷன் தேவனிடத்திலே உறவு கொள்ளவிருப்பதினால், கல்வாரி இரத்தத்தினாலே அந்த ஆத்துமா சுத்திகரிக்கப்படவேண்டியது அவசியம்.
ஆவியினால் உண்டாகும் சுத்திகரிப்பைக் குறித்து வேதம் இவ்வாறு சொல்லுகிறது, “அப்பொழுது ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது…” (ஏசாயா 4:3).
இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோது தண்ணீரினால் சீஷர்களின் கால்களைக் கழுவினார் (யோவான் 13:5). இன்றைக்கும் தண்ணீரானது, தேவனோடு செய்கிற உடன்படிக்கையான ஞானஸ்நானத்தின் அடையாளமாய்த் திகழ்கிறது.
அதன் பின்பு அவர் கல்வாரி சிலுவையிலே தம்முடைய இரத்தத்தை சிந்தினார். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது. அதன் பின்பு பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது பரிசுத்த ஆவியின் வல்லமை ஊற்றப்பட்டது. மூன்றுவித சுத்தகரிப்பும் தேவனுடைய பிள்ளைகளுக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது.
இயேசு இரத்தம் சிந்தாதபட்சத்தில் ஜனங்களுடைய இருதயம் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுவதற்கு தகுதியில்லாததாகவே காணப்பட்டது. ஆகவேதான் பழைய ஏற்பாட்டில் ஆவியானவரால் நிரந்தரமாய் ஜனங்களுடைய உள்ளத்தில் தங்கியிருந்ததாக நாம் காண முடியவில்லை.
ஆனால், இயேசுகிறிஸ்து இரத்தம் சிந்தினதின் மூலமாக நீங்கள் கழுவப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள். கிறிஸ்து தம்முடைய இரத்தமாகிய ஜீவனை ஊற்றினதினாலே அவருடைய ஜீவன் உங்களுக்குள் வருகிறது. ஆவியாகிய தேவன் தம்முடைய ஆவியினால் உங்களை அபிஷேகம் பண்ணுகிறார். கிறிஸ்துவின் ஜீவனும், ஆவியானவரின் வல்லமையும், உங்களிலே குடிகொள்ளுவது எத்தனை மகிமையானது! தேவபிள்ளைகளே, சுத்திகரிப்புக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள்.
நினைவிற்கு:- “…எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்” (வெளி. 5:9,10).
