No products in the cart.
நவம்பர் 23 – மூன்று மடிகள்!
“அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்” (லூக். 16:22).
இன்றைய தியானத்திலே, ஆபிரகாமின் மடி, தெலீலாளின் மடி, ஆசீர்வாதத்தின் மடி என்று மூன்று விதமான மடிகளைக் குறித்து தியானிக்கப் போகிறோம்.
முதலாவது, ஆபிரகாமின் மடி. அது தேற்றுகிற மடி. அந்த மடி இஸ்ரவேலரின் முற்பிதாவின் மடி. விசுவாசிகளின் தகப்பனுடைய மடி. இஸ்ரவேல் ஜனங்களில் சிறந்தவருடைய மடி. உலகத்தில் வாழ்ந்த நாட்களிலெல்லாம் வேதனையிலும் துன்பத்திலும் உழன்ற லாசரு மரித்தபோது, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடிக்குக் கொண்டுச் செல்லப்பட்டான். பூமியிலே நீங்கள் எவ்வளவுதான் வேதனைப்பட்டாலும் நித்தியத்திலே தேற்றப்படுவீர்கள்.
இரண்டாவது, தெலீலாளின் மடி. அது பார்ப்பதற்கு சொகுசான மடியைப் போல காட்சியளித்தாலும், அது நித்திய வேதனைக்குள் அழைத்துச் செல்லுகிற ஒரு மடியாகும். அவள் இஸ்ரவேலிலேயே மிகவும் பலசாலியான நியாயாதிபதியாகிய சிம்சோனை தன் மடியிலே கிடக்கச் செய்தாள். அந்தோ அவன் முடிவு என்ன? கண்கள் பிடுங்கப்பட்டு, தலை மொட்டை அடிக்கப்பட்டு, உடல் பலமெல்லாம் நீங்கிய ஒரு நிலை. முடிவிலே அவனுடைய பதவி, அந்தஸ்து, மேன்மை என அனைத்தையுமே அவன் இழந்தான்.
நீங்கள் சுகபோகமான மடிகளுக்கும், ஆசை இச்சைகளைக் காட்டும் சிற்றின்பங்களுக்கும் விலகி ஓடுங்கள். இச்சையான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு விலகி ஓடுங்கள். வேதம் சொல்லுகிறது: “அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது. அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவ பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை” (நீதி. 2:18,19).
“உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே. சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தை கொடூரருக்கும் கொடுத்து விடுவாய். அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின் பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும். முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் பண்ணினதே… என்று முறையிடுவாய்” (நீதி. 5:8-14).
மூன்றாவது, ஆசீர்வாதத்தின் மடி. ஆசீர்வாதத்தின் மடி உங்களுடைய மடிதான். உங்களுடைய மடி ஆசீர்வாதமாய் இருக்க வேண்டுமென்றால், நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுப்பதில் தாராளமாயிருங்கள். இயேசு சொன்னார்: “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்” (லூக்.6:38). ஆம், உங்கள் மடியே ஆசீர்வாதத்தின் மடி.
தேவபிள்ளைகளே, கர்த்தருக்குக் கொடுக்கும்போது உற்சாகமாய், முழு மனதோடு கொடுங்கள். ஏழை எளியவர்களுக்குக் கொடுக்கும்போது உதாரத்துவமாய்க் கொடுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களை மிகுதியாய் ஆசீர்வதிப்பார்.
நினைவிற்கு:- “…உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்” (உபா.28:1).
