No products in the cart.
நவம்பர் 21 – முதலாவது சுத்தமாக்கு!
“…அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு” (மத். 23:26).
நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை, முறையாக செய்துவிடும்போதுதான் கர்த்தர் அவர் செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் செய்து உங்களை ஆசீர்வதிப்பார். முதலாவது, நீங்கள் அவருடைய ராஜ்யத்தின் நீதியைத் தேடுகிறது மட்டுமல்லாமல், உங்கள் உட்புறத்தை சுத்தமாக்குவதும் மிகவும் அவசியம்.
ஜெபிப்பதற்கு முழங்காற்படியிடுகிறீர்கள். கர்த்தரிடத்தில் பல விண்ணப்பங்களை சமர்ப்பிக்கிறீர்கள். ஆனால் உங்கள் உட்புறம் சுத்தமாய் இராதபட்சத்தில் தேவன் உங்களுடைய ஜெபத்தைக் கேட்க எப்படிப் பிரிப்படுவார்? நீங்கள் ஜெபிக்க ஆரம்பிக்கும்போதே பாவம் உங்களுக்கு ஒரு தடைக்கல்லாய் மாறிவிடுகிறது. உங்கள் பாவங்கள் உங்களுக்கும், தேவனுக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்குகிறது (ஏசாயா 59:2) என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே முதலாவது பாவத்தை அகற்றுவீர்களாக.
உங்களது உட்புறமானது கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவி, சுத்தமாக்கப்பட வேண்டும். சுத்தமுள்ள இருதயத்தோடு ஜெபிக்கும்போதுதான் அந்த ஜெபம் கர்த்தருக்குப் பிரியமானதாய் இருக்கும். அழுக்கையும், பாவத்தையும் சுமந்துகொண்டு ஜெபிக்கிற ஜெபம் அவருக்கு அருவருப்பாய் அல்லவா தோன்றும்?
ஒரு பாத்திரத்தை பால் வாங்குவதற்காகக் கொண்டு போகிறீர்கள். அந்த பாத்திரத்தில் சேறும், சகதியும், அழுக்கும் நிறைந்திருந்தால் அந்த பாத்திரத்திலே யாரும் பாலை வார்க்கமாட்டார்கள். ஆகவே அதை நன்றாக தேய்த்துக் கழுவி, சுத்தமாக்கிய பிறகுதான் அந்த பாத்திரத்தில் பாலை வாங்குவீர்கள். அதுபோலவே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறும் முன்பாக உங்கள் உட்புறத்தைச் சுத்தமாக்கிக் கொள்ளுங்கள்.
நீங்கள் யார் யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமோ அவர்களையெல்லாம் அணுகி மன்னிப்புக் கேளுங்கள். எந்தெந்த பொருட்களையெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டுமோ, அதையெல்லாம் திருப்பிக் கொடுங்கள். கர்த்தருக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பாவப் பிரச்சனைகளையும், மனுஷனுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள மனவருத்த பிரச்சனைகளையும் கண்ணீரோடு அறிக்கையிட்டு கர்த்தரிடத்திலும் மனுஷனிடத்திலும் நல்மனம் பொருந்துங்கள். அப்போது கர்த்தர் உங்களைத் தம்முடைய இரத்தத்தினால் கழுவி, உங்கள் உட்புறத்தைச் சுத்தமாக்குவார். மட்டுமல்ல, நீங்கள் வேண்டிக்கொள்ளும்போது, பரிசுத்த ஆவியின் வல்லமையையும் தந்தருளுவார்.
இன்றைக்கு அநேகர் வெளிப்புறத்தை மட்டும் சுத்தமாக்க அறிந்திருக்கிறார்கள். காலையில் எழுந்ததும் முகம் கழுவுகிறார்கள். பல் விளக்குகிறார்கள். சோப்புப் போட்டு குளிக்கிறார்கள். பவுடர் பூசிக்கொள்ளுகிறார்கள். ஆனால் உள்ளத்திலோ பாவங்களும், வைராக்கியங்களும், கசப்புகளும் நிரம்பி காணப்படுகின்றன. தேவபிள்ளைகளே, உங்கள் உள்ளான ஜீவியத்திலும், உங்கள் ஆத்துமாவிலும் சுத்தம் காணப்பட வேண்டியதே மிகவும் அவசியம். வெளியலங்காரத்தினால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
நினைவிற்கு:- “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9).
