No products in the cart.
நவம்பர் 16 – முதற்பலன்!
“…நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்” (யாக். 1:18).
நீங்கள் முதற்பலன்களாகும்படி முன் குறிக்கப்பட்டிருக்கிறீர்கள். அதற்காகவே கர்த்தர் உங்களை சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்திருக்கிறார்.
“முதற்பலன்” என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! சாதாரணமாக ஒரு மரமானது துளிர்த்து மொட்டுகளை வைக்கிறது. மொட்டுகளில் சில பூக்காமலேயே வாடி வதங்கி விழுகின்றன. அப்படியே பூக்கிற பூக்கள் எல்லாவற்றிலும் காய்கள் உண்டாவதில்லை. சில காய்க்காமலேயே மடிந்து போகின்றன. இன்னும் சில பிஞ்சுகளாய் இருக்கும்போதே புழுக்களால் சேதப்படுகின்றன. காற்றிலும் விழுந்து போகின்றன. ஆனால் சில கனிகளோ திரட்சியாய், ருசிகரமானதாய், இனிமையானதாய், முதற்பலனாய் மாறுகின்றன.
ஒருவன் கோதுமைப் பயிரை வளர்க்கும்போது, முதிர்ந்த கதிர்களிலே சில பதர்களாய் இருக்கின்றன. சில கோதுமை மணிகளாய்த் திகழ்கின்றன. அவன் கோதுமையின் பதர்களையெல்லாம் எடுத்துக்கொண்டுபோய் அக்கினியிலே சுட்டெரிக்கிறான். அதே நேரத்தில், கோதுமை மணிகளையோ தன்னுடைய களஞ்சியங்களிலே சேர்த்து வைக்கிறான்.
கிறிஸ்து எல்லாருக்காகவும்தான் சிலுவையிலே பாடுபட்டு, இரத்தம் சிந்தி, மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். உண்மைதான். இந்த நிகழ்வால் பலர் இருதயத்தில் உணர்த்தப்படுகிறார்கள் என்றாலும் வளராமல் நின்று விடுகிறார்கள். இன்னும் சிலர் மறுபடியும் பிறக்கிற அனுபவத்திற்குள் வந்தாலும், உலகத்தைப் பார்த்து பின்வாங்கிப் போய்விடுகிறார்கள். இன்னும் சிலர் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றாலும், ஜெப ஜீவியத்தில் சரியாய் இல்லாதபடியினால், உலக இச்சைகளினால் ஈர்க்கப்பட்டுப் பின்வாங்கிப் போய்விடுகிறார்கள்.
இன்னும் சிலர் எல்லாவற்றையும் தாண்டி ஞானஸ்நானம் பெற்று, அபிஷேகம் பெற்று கர்த்தருக்காக வேறுபிரிக்கப்பட்டவர்களாக வருகிறார்கள். அவர்கள் கர்த்தரிலே நிலைத்து நின்று பூரணத்தையும், பரிசுத்தத்தையும் நோக்கி முன்னேறிச் செல்லுகிறார்கள். அவர்கள் ஜெயங்கொண்டவர்களாக விளங்குகிறார்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் “கானானுக்கு” என்று அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் எகிப்தை விட்டு வந்த பலரும் எகிப்தை இச்சித்து, எகிப்திலுள்ள பூண்டு வகைகளையும், கொம்மட்டிக்காய்களையும் வாஞ்சித்து வனாந்தரத்திலே மரித்துப் போனார்கள். இன்னும் தேவனைப் பரிசோதித்ததாலும், முறுமுறுத்ததாலும் அழைக்கப்பட்ட அழைப்புக்கு அவர்கள் அபாத்திரராய்ப் போனார்கள். அதேநேரத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டவர்களில், யோசுவாவும் காலேப்பும் முதற்பலன்களாய் கானானுக்குள் வந்து அதைச் சுதந்தரித்துக் கொண்டார்கள்.
தேவபிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குள் வரும்போது புது சிருஷ்டியாய் மாறுகிறீர்கள். அதைத் தொடர்ந்து, பூரண சற்குணராய் வளரவேண்டும் என்பதையும் நீங்கள் மறந்து போய்விடக்கூடாது.
நினைவிற்கு:- “எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்” (கொலோ. 1:28).