No products in the cart.
நவம்பர் 07 – மனரம்மியம்
“…நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக் கொண்டேன்… எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்” (பிலி. 4:11,12).
அப். பவுல் “கற்றுக்கொண்டேன்” என்றும், “போதிக்கப்பட்டேன்” என்றும் இந்த வேத வசனத்தில் சொல்லுகிறார். சில காரியங்களை நீங்கள் நீங்களாகவே கற்றுக்கொள்ளுகிறீர்கள். சில காரியங்களை மற்றவர்களின் போதிப்பினால் கற்றுக்கொள்ளுகிறீர்கள். அப். பவுல் அவரது ஆவிக்குரிய ஜீவியத்தில் அனுபவங்களின் மூலமாக கற்றுக்கொண்ட உண்மைகளுமுண்டு, கர்த்தரால் போதிக்கப்பட்டு தெரிந்து கொண்டவைகளுமுண்டு. எந்த நிலைமையிலும் மனரம்மியமாயிருப்பது ஒரு பாக்கியமான அனுபவம்தான்.
ஒரு பக்தனுடைய வாழ்க்கையில் புயல் வீசினது. அவர் துக்கத்தோடு மரங்கள் அடர்ந்த ஒரு காட்டின் வழியாக நடந்து சென்றார். அப்போது திடீரென்று பெருங்காற்று வீச ஆரம்பித்தது. சில மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. காய்ந்த இலைகள் எல்லாம் பறக்க ஆரம்பித்தன. பக்தன் அதைப் பார்த்தவுடனே, “என் வாழ்க்கையிலும் புயல், இந்த மரங்களின் மத்தியிலும் புயல்தானா?” என்று நொந்துகொண்டார்.
அப்போது கர்த்தர், “மகனே, இந்தப் பெருங்காற்றினால் இந்த மரத்திற்கு எவ்வளவு நன்மை என்பதைப் பார்த்தாயா? இந்த காற்றினால் மரம் அதிகமாக அசைக்கப்படுவது உண்மைதான். அது எவ்வளவுக்கெவ்வளவு அசைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதனுடைய வேர் ஆழமாக பூமியில் இறங்கி, அடிமரம் உறுதியுள்ளதாக விளங்குகிறது. காற்றினால் பலவீனமான கிளைகள் முறிந்து போகின்றன. காய்ந்துபோன இலைகள் எல்லாம் உதிர்ந்து போகின்றன. ஆகவே மரம் இனிமையான புது கிளைகளை உண்டுபண்ண தகுதியுள்ளதாய் மாறுகிறது.
மட்டுமல்ல, காற்று வீசுவதினால் மரத்திலுள்ள விதைகள் பல இடத்திற்கு பரவுகின்றன. அதன் மூலம் ஆங்காங்கே புதிய மரங்கள் தோன்றுகின்றன. அது போலவே, உன்னுடைய வாழ்க்கையில் புயல் வீசும்போது, அது உன்னை ஆவிக்குரிய ஆழமான அனுபவத்திற்குள் கொண்டு செல்லுகிறது. கர்த்தரை நெருங்கிப் பற்றிக் கொள்ளக் கிருபை செய்கிறது” என்று பேசினார். அன்று முதல் அந்த பக்தன் எந்த நிலைமையிலும் மனரம்மியமாக இருக்கக் கற்றுக் கொண்டார்.
அப். பவுல், ஒரு பெரிய அப்போஸ்தலன்தான். அவர் அநேகம்பேரை இரட்சிப்புக்குள் கொண்டு வந்தவர்தான். ஆனாலும் அவருடைய சரீரத்தில் அவரைக் குத்தி வேதனைப்படுத்துகிற ஒரு முள் சாத்தானின் தூதனாய் இருந்தது. அந்த சூழ்நிலையிலும் அவர் மனரம்மியமாக இருக்கக் கற்றுக்கொண்டார்.
தாவீது ஒரு பெரிய இராஜாதான்; ஆனால் அவருடைய பிள்ளைகளோ ஒன்றுக்கொன்று சண்டையிடுகிறவர்களாகவும், அவரையே துரத்துகிறவர்களாகவும் இருந்தார்கள். ஆபிரகாம் பெரிய விசுவாசிகளின் தந்தைதான்; என்றாலும் அவருடைய மனைவியின் அழகினிமித்தம் போராட்டத்தின் பாதையில் அவர் செல்ல வேண்டியதாயிருந்தது. தேவபிள்ளைகளே, குறைவோ, நிறைவோ, போராட்டமோ, சமாதானமோ, கர்த்தருக்குள் எப்பொழுதும் மனமகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாய் இருக்கும்.
நினைவிற்கு:- “சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்” (நீதி. 15:16).