AppamAppam - Tamil

நவம்பர் 04 – மகிமையான சரீரத்துக்கு ஒப்பாக!

“அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” (பிலி. 3:21).

உலகப்பிரகாரமான நமது சரீரம் அற்பமான ஒன்றாகும். இது வியாதியுள்ளதும், பலவீனமானதும், களைப்புள்ளதும், சோர்வுள்ளதுமான ஒன்று. இந்த சரீரம் வலியையும், வேதனையையும், துயரங்களையும், துன்பங்களையும் அனுபவிக்கிற ஒன்றாய் இருக்கிறது. ஆனால், கர்த்தர் அதை தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துகிறார்.

இந்த மறுரூபப்படுத்தப்பட்ட சரீரம் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சரீரத்தைப் போல மாறும். அழிவுள்ளது அழியாமையையும், சாவுக்கேதுவானது சாவாமையையும் தரித்துக் கொள்ளும். அப். யோவான் எழுதுகிறார், “அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 3:2).

உயிர்த்தெழுந்த இயேசுவின் சரீரம் எத்தனை அதிசயமானதாய் இருந்தது! சீஷர்கள் அறைக் கதவை பூட்டிக்கொண்டு உள்ளேயிருந்த போதிலும், அந்த சரீரம் உள்ளே பிரவேசித்து, சீஷர்களுக்கு சமாதானம் கூறி வாழ்த்திய பின்பு வெளியே வந்தது. ஒலிவ மலையில் சீஷர்கள் நின்றுகொண்டிருந்தபோது, அந்த சரீரம் வானத்திலே ஏறெடுக்கப்பட்டது. இயேசு அந்த உயிர்த்தெழுந்த சரீரத்தோடுகூட பரலோகத்திற்கு ஏறிச் சென்று பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்தார்.

கர்த்தர் தம்முடைய ஆவியினாலே உங்களுடைய சரீரத்தை மறுரூபமாக்குகிறார். உங்களுடைய உலகப்பிரகாரமான சரீரத்திற்கு மூன்று வேளை போஜனத்தைக் கொடுக்கிறீர்கள். அதே நேரத்தில் உள்ளான மனுஷன் மறுரூபப்படுவதற்கு வேத வாக்கியங்களை உட்கொள்ளுகிறீர்கள். கர்த்தர் வேத புத்தகத்தை தேனுக்கும், தேன்கூட்டிலிருந்து ஒழுகுகிற தெளிதேனுக்கும் ஒப்பிட்டுச் சொல்லுகிறார்.

அதுபோலவே ஆவியானவருடைய அபிஷேகத்தை அப்பத்துக்கும், மீனுக்கும், முட்டைக்கும் ஒப்பிட்டுக் கூறுகிறார். இது உள்ளான மனுஷனாகிய ஆத்துமாவுக்கு போஜனமாய் இருக்கிறது. மட்டுமல்ல, உங்களுடைய சரீரம் கிறிஸ்துவின் சாயலில் மகிமையின்மேல் மகிமையடைவதற்கு அவர் தம்முடைய இரத்தத்தையும் மாம்சத்தையும் வைத்திருக்கிறார். அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் நீங்கள் புசித்துப் பானம்பண்ணும்போது கிறிஸ்துவின் சரீரம் உங்களுக்குள் ஒன்றரக் கலக்கிறது. நீங்கள் அவருடைய சாயலிலே, உங்களை அறியாமலேயே, மறுரூபப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

தேவபிள்ளைகளே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய மகிமையான தேவ தூதர்களோடு பிதாவின் மகிமை பொருந்தினவராய் வரும்போது, இமைப்பொழுதில் கர்த்தர் உங்களுடைய அற்பமான சரீரத்தை தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். மண்ணான சரீரம் விண்ணுக்குரிய சரீரத்தை இமைப்பொழுதில் தரித்துக் கொள்வதினாலே நீங்கள் ஆகாயத்தில் அவரோடுகூட எடுத்துக்கொள்ளப்பட்டு பறந்து செல்லுவீர்கள். ஆ! அது எத்தனை மகிமையான அனுபவம்!

நினைவிற்கு:- “அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்” (1 யோவான் 3:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.