No products in the cart.
அக்டோபர் 28 – எழுந்திரு, பிரகாசி!
“ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்” (எபே. 5:14).
நாம் துரிதமாய் செயலாற்ற வேண்டிய நேரமிது. துரிதமாய் செய்யவேண்டிய இந்த நேரத்தில் நாம் தூங்கிக்கொண்டிருக்கலாமா. இது, நாம் எழுந்து, கர்த்தருக்காக பிரகாசிக்க வேண்டிய நேரமல்லவா? “தூங்குகிற நீ மரித்தோரை விட்டு எழுந்திரு” என்று வேதம் உங்களைத் துரிதப்படுத்துகிறது.
இன்றைக்கு பல சபைகள் தூங்கி வழிந்து கொண்டிருக்கின்றன. நிர்விசாரமே இந்தத் தூக்கத்திற்கு காரணம். சாத்தான் தாலாட்டுப்பாட விசுவாசிகள் பிரசங்க மயக்கத்தில் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். சினிமா போன்ற பாவ மோகத்தினாலும் விசுவாசிகள் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தாவீது கண்ணீரோடு, “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப் பார்த்து, எனக்குச் செவி கொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்” (சங். 13:3) என்று ஜெபித்தார். நீங்களும் அவ்விதமாய் ஜெபிப்பீர்களா?
சிம்சோனின் நித்திரையைச் சிந்தித்துப் பாருங்கள். அவன் தேவனுடைய மனுஷன், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன். நசரேய விரதமுடையவன், இஸ்ரவேலை நியாயம் விசாரிக்க அழைக்கப்பட்டவன். ஆனாலும் அந்தோ, அவனுடைய உள்ளத்தை விபச்சார ஆவி பற்றிப்பிடித்தது. வேசியாகிய தெலீலாளை நோக்கி ஓடினான்.
வேதம் சொல்லுகிறது, “அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப் பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று” (நியாயா. 16:19). கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசிக்க வேண்டிய அவன் பாதி வயதிலேயே தன் ஓட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
எலியாவின் நித்திரையைப் பாருங்கள். அவர் எவ்வளவு வல்லமையான கர்த்தருடைய தீர்க்கதரிசி. நானூற்று ஐம்பது பாகால் தீர்க்கதரிசிகளுக்கு சவால் கொடுத்து, கர்த்தரே தேவன் என்று நிரூபித்தவர்.
ஆனால், அவரை மனச்சோர்பு பற்றிப்பிடித்துக் கொண்டது. சூரைச்செடியின் கீழாய்ப் படுத்து நித்திரை செய்ய ஆரம்பித்தார். கர்த்தர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தேவதூதனை அனுப்பி, தட்டி எழுப்பி, நீ செல்ல வேண்டிய தூரம் வெகு தூரமென்று சொல்லி பெலப்படுத்தினார். நீங்கள் கர்த்தருக்காக செய்ய வேண்டியது ஏராளமானதாய் இருக்கும்போது நித்திரை மயக்கமாய் இராதேயுங்கள்.
யோனாவின் நித்திரையைக் கவனித்துப் பாருங்கள். ஆத்துமபாரம் அவரை அழுத்தவில்லை. கர்த்தர் இட்ட கட்டளையின்படி அவர் நினிவேக்கு சென்றிருந்தால் அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தியிருக்கக்கூடும். அவர் கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தேவபிள்ளைகளே, தூங்குகிற நீங்கள் அதைவிட்டு எழுந்திருங்கள். கர்த்தருக்காக பிரகாசியுங்கள்.
நினைவிற்கு:- “சீமோனே, நித்திரை பண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக் கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” (மாற்கு 14:37,38).