No products in the cart.
அக்டோபர் 26 – ஏந்துவார், சுமப்பார், தப்புவிப்பார்!
“இனிமேலும் நான் ஏந்துவேன்; நான் சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசாயா 46:4).
கர்த்தர், ஒரு தாயைப்போல உங்களை ஏந்துகிறவர். தகப்பனைப் போல உங்களை சுமக்கிறவர். சகோதரனைப்போல உங்களோடிருந்து உங்களைத் தப்புவிக்கிறவர். ஆகவேதான் அவர் ‘இதுவரை உங்களைத் தாங்கி வந்ததுபோல இனிமேலும் ஏந்துவேன், சுமப்பேன், தப்புவிப்பேன்’ என்று வாக்களிக்கிறார்.
கர்த்தர்தான் உங்களை தாயின் கர்ப்பத்திலே உருவாகச் செய்தவர் (ஏசாயா 44:2). கர்த்தர் சொல்லுகிறார், “தாயின் வயிற்றில் தோன்றினது முதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன்; நான் சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசாயா 46:3,4).
ஒரு ஓவியர் வரைந்த படத்தைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். அந்த படத்தில் இருந்த மண் பாதை ஒரு பக்தனின் வாழ்க்கையை விளக்குவதாக இருந்தது. ஆரம்பம் முதல் அன்று வரை, அந்த பக்தனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் வரிசைக்கிரமமாக அந்த பாதையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பாதை முழுவதும் கர்த்தரும் அந்த பக்தனும் ஒன்றாக சேர்ந்து நடந்து சென்றதற்கு அடையாளமாக இருவரது காலடித் தடங்களும் அப்பாதை முழுவதும் இடம் பெற்றிருந்தன.
அப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த பக்தன், இடையில் அவனது வாழ்க்கையில் ஓர் ஆபத்தான சூழ்நிலை வந்த நேரத்தில், அப்பாதையில் ஒருவரது கால்தடம் மட்டும் பதிந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். “ஐயோ, ஆபத்தான நேரத்தில் கர்த்தர் என்னுடன் வராமல் இருந்துவிட்டாரே” என்று கதறினான். கர்த்தர் சொன்னார், “மகனே, ஆபத்துக்காலத்தில் நான் உன்னைத் தூக்கி என் தோளின்மேல் வைத்துக்கொண்டு நடந்ததால், அங்கே என் கால் தடம் மட்டுமே பதிந்துள்ளது. அந்த நேரத்தில் நீ பாதுகாப்பாக என் தோளின்மேல் அமர்ந்திருந்தாய்.”
கர்த்தர் உங்களை நடத்துகிற சந்தர்ப்பங்களுண்டு. ஏந்தி சுமந்துத் தப்புவிக்கிற சந்தர்ப்பங்களுமுண்டு. வனாந்தரத்தில் இஸ்ரவேல் ஜனங்களைக் கர்த்தர் வழிநடத்திக் கொண்டுவந்தபோது, ஒரு பெரிய கழுகு தன் குஞ்சுகளைச் செட்டைகளின் மேல் சுமந்துகொண்டு செல்லுவதுபோல நாற்பது ஆண்டுகளும் அவர் சுமந்து கொண்டு சென்றார். இன்றைக்கும் உங்களுக்கு உன்னதத்திற்குரிய சகல ஆசீர்வாதங்களையும் தரும்படி உங்களைச் சுமந்துகொண்டு செல்லுகிறவராகவே இருக்கிறார்.
மேய்ப்பன், காணாமல்போன ஆட்டை தேடிக் கண்டுபிடித்தவுடனே, என்ன செய்தாராம்? அந்த ஆட்டை நடக்க விடவில்லை. தனியே நடக்கவிட்டால் ஒருவேளை அது மீண்டும் காணாமல் போய்விடக்கூடும். ஆகவே தன் அன்பை வெளிப்படுத்தும்படி தன் தோள்களிலே தூக்கி வைத்துக் கொண்டார். அப்படித் தூக்கிச் சுமக்கும்போது மேய்ப்பனின் வாய் ஆட்டின் காது அருகே வந்துவிடும். மேய்ப்பனுடைய கண்கள் ஆட்டைக் கூர்ந்து நோக்கும். ஆட்டுக்கும் மேய்ப்பனுக்கும் இடையே ஆழமான ஒரு உறவு ஏற்படும். தேவபிள்ளைகளே, நம் கர்த்தர் உங்களை தூக்கிச் சுமக்கும் தேவன் என்பதை உணர்ந்தவர்களாய் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள்.
நினைவிற்கு:- “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்” (சங்கீதம் 103:13).