No products in the cart.
அக்டோபர் 22 – மகிமையும், கனமும்!
“தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடி சூட்டப்பட்டதைக் காண்கிறோம்” (எபி. 2:9).
இயேசு சிலுவையிலே மரணத்தை ருசி பார்த்தார். அவர் மரண பயத்தையும், கலக்கத்தையும் ருசிபார்த்தது மட்டுமல்ல, அவை தம்முடைய பிள்ளைகளாகிய நம்மைத் தாக்கிவிடக்கூடாதே என்று எண்ணி அவற்றிலிருந்து நம்மை முற்றிலும் விடுதலையாக்கச் சித்தமானார்.
பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் மனம்போல உல்லாசமாய் வாழ்ந்து சிற்றின்பங்களை அனுபவித்து வந்தார். ஒரு நாள் இரவு நேரத்தில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவருடைய காதிலே, “நாளை காலை ஆறு மணிக்கு ஒரு செல்வந்தன் மரிக்க போகிறான்” என்ற குரல் கேட்டது.
அக்குரலைக் கேட்டு, அந்தச் செல்வந்தர் நடுங்கி திடுக்கிட்டு விழித்தார். தன் மனைவியை எழுப்பினார். “ஐயோ, எனக்கு பயமாய் இருக்கிறது; ஒரு செல்வந்தன் மரிக்க போகிறான் என்கிற சத்தம் என் காதுகளிலே கேட்டது. நான் காலையில் ஒருவேளை மரித்தாலும் மரித்து விடுவேன்” என்று சொல்லி நடுங்க ஆரம்பித்தார். மனைவியோ ‘இது வெறும் கனவுதான் கலங்காதிருங்கள், தூங்குங்கள்’ என்று சொல்லி விட்டாள்.
ஆனால் அந்த செல்வந்தரால் தூங்க முடியவில்லை. மருத்துவர்களுக்கு உடனே டெலிபோன் செய்து வரவழைத்தார். அதிகாலை இரண்டு மூன்று மணிக்கெல்லாம் மருத்துவர்கள் வந்தார்கள். அவரைப் பரிசோதித்துவிட்டு ‘உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் இருக்கிறது, இருதயம் நன்றாக இயங்குகிறது, உங்களுக்கு ஒன்றும் நேரிடாது. படுத்துத் தூங்குங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
ஆனால் அவரது உள்ளம் இடைவிடாமல் கலங்கி கொண்டேயிருந்தது. ‘எப்பொழுது காலை ஆறு மணியாகும்? எப்பொழுது நான் மரிப்பேன்?’ என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்து விட்டார். காலை ஆறு மணியானது. அவருடைய வீட்டிலிருந்த வயதான பக்தியுள்ள வேலைக்காரன் அவரண்டை வந்து, ‘ஐயா, என் அருமை ஆண்டவர் என்னை அழைக்கிறார். நான் சென்று வருகிறேன்’ என்று சொல்லி விடைபெற்றுச் சென்று, படுக்கையில் போய்ப் படுத்தான். படுத்த உடனேயே அவனது ஜீவன் அவனைவிட்டு அகன்றது.
இந்தச் செல்வந்தர் சிந்திக்க ஆரம்பித்தார். ‘உலகப்பிரகாரமாய் நான் செல்வந்தனாய் இருக்கிறேன். ஆனால் கர்த்தருக்கு முன்பாக இந்த ஏழை வேலைக்காரன் மிகப்பெரிய செல்வந்தனாய் இருந்திருக்கிறானே. அவன் பெற்ற இரட்சிப்பு, அவன் பெற்ற தெய்வீக சமாதானம், அவன் பெற்ற தெய்வீக அமைதி ஆகியவை எத்தனை பெரிய செல்வங்கள்’ என்பதை அந்த ஐசுவரியவான் அன்றைக்கு அறிந்து கொண்டார். அந்த சம்பவமானது அவரை இரட்சிப்பிற்குள் வழிநடத்தியது.
தேவபிள்ளைகளே, பூமியிலே நீங்கள் ஏழையாக, படிப்பறிவில்லாதவர்களாக, சாதாரணமானவர்களாக இருந்தாலும், கர்த்தருடைய பார்வையில் நீங்கள் விலையேறப் பெற்றவர்கள். அவர் உங்களைச் செல்வந்தர்களாய், ஐசுவரியவான்களாய், நித்திய ஆசீர்வாதத்தின் சுதந்தரவாளிகளாய்க் காண்கிறார்.
நினைவிற்கு:- “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1 கொரி. 15:57).