No products in the cart.
அக்டோபர் 21 – குழந்தையும், புருஷனும்!
“நான் புருஷனானபோதோ, குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்” (1 கொரி. 13:11).
குழந்தைத்தன அனுபவம் என்பதற்கும், வளர்ச்சியடைந்த புருஷரின் அனுபவம் என்பதற்கும் வித்தியாசங்கள் அதிகம் உண்டு. நீங்கள் குழந்தையாயிருந்தபோது குழந்தைத்தனமான காரியங்களிலே ஈடுபட்டிருக்கலாம். உலகப் பார்வைக்கு அது சந்தோஷமானதாகத் தெரியும். ஆனால் பெரியவர்களான பிறகும் அப்படியே நடந்து கொண்டிருந்தால் உலகம் அதை ஏற்றுக்கொள்ளாது.
அப். பவுல், “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்” (1 கொரி. 13:11) என்று எழுதுகிறார்.
குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும்போது, பலமுறை கீழே விழுவதுண்டு. குழந்தைகள் மூன்று சக்கர வண்டியைத் தள்ளிக்கொண்டு, சுவரைப் பிடித்துக் கொண்டு தத்தி தத்தி நடப்பது பார்க்க அழகாக இருக்கும். ஆனால் பெரியவர்களான பிறகும் விழுந்து விழுந்து நடந்து கொண்டிருந்தால் அது பார்ப்பவர்களை நம்மீது பரிதாபப்பட வைக்கும். அப்படியே ஆவிக்குரிய ஜீவியத்திலும் ஆரம்ப காலத்தில் பலமுறை உங்களுக்கு வீழ்ச்சிகள் ஏற்பட்டிருந்திருக்கலாம். ஆனால் ஆவிக்குரிய ஜீவியத்தில் முதிர்ந்த பிறகும், விழுந்து விழுந்து எழுந்து கொண்டிருந்தால், கர்த்தருடைய உள்ளம் வேதனைப்படும் அல்லவா?
குழந்தையாய் இருக்கும்போது குழந்தையைப் போல பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால் பெரியவர்களாகும்போது நீங்கள் பொறுப்புணர்ச்சியோடு, கண்ணியத்தோடு, கௌரவத்தோடுகூட, பேசவேண்டியது அவசியம்.
வேதம் சொல்லுகிறது: “பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்” (எபி. 5:13,14).
நீங்கள் பல ஆண்டுகள் கிறிஸ்தவனாயிருந்தும், இன்னும் குழந்தையைப்போலவே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? குழந்தையின் சிந்தனை பெரும்பாலும் எதில் இருக்கும் தெரியுமா? தகப்பன் மாலை வீட்டிற்குத் திரும்பும்போது என்ன தின்பண்டம் கொண்டு வருவார் என்பதிலேதான் இருக்கும். தகப்பன் தனக்கு வைத்திருக்கிற ஆஸ்தி என்ன, தகப்பனுடைய அந்தஸ்து என்ன, சுதந்திரங்கள் என்ன, மேன்மை என்ன போன்ற முக்கிய காரியங்கள் அதற்குத் தெரிவதில்லை.
அதுபோலவே, அநேகர், தேவன் வைத்திருக்கிற உன்னதமான, மகிமையான, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும், வரங்களையும் குறித்து அறிந்து கொள்ளாமல், பரலோக சுதந்திரங்களைக் குறித்து தெரிந்துகொள்ளாமல், இம்மைக்குரிய நன்மைகளின் மேலேயே நோக்கமாயிருக்கிறார்கள். தேவபிள்ளைகளே, “நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்” (கொலோ. 3:1).
நினைவிற்கு:- “நாம் இனிக் குழந்தைகளாயிராமல்… அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்” (எபே. 4:14,15).