bandar togel situs toto togel bo togel situs toto musimtogel toto slot
AppamAppam - Tamil

அக்டோபர் 09 – தாழ்மையும் ஆசீர்வாதமும்!

“…நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப் பாருங்கள்” (ஏசா. 51:1).

கர்த்தர் ஆதாம் ஏவாளை சிருஷ்டிக்க நினைத்தபோது, தங்கத்திலிருந்தோ, வைரத்திலிருந்தோ உருவாக்காமல், வெறும் மண்ணிலிருந்தே உருவாக்கச் சித்தமானார். “நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியை நோக்கிப் பாருங்கள்” என்று வேதம் சொல்லுகிறது.

கிராமங்களிலே வீடு கட்டுவதற்கு மண்ணைத்தான் அதிகமாய்ப் பயன்படுத்துவார்கள். வீட்டின் அருகிலே குழியாக தோண்டி அதிலிருந்து செங்கல் அறுத்து, அந்த செங்கலைக்கொண்டு வீட்டைக் கட்டி, அதன்மேல் சாந்து பூசுவார்கள். வாசல் கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் வைப்பார்கள். பிறகு அந்த வீட்டைப் பார்க்கும்போது, அவர்களுக்குப் பெருமையாய் இருக்கும். ஆனால் அந்த வீடு கட்டப்படுவதற்கு தோண்டப்பட்ட குழியைக்குறித்து அவர்கள் சிந்திப்பதேயில்லை.

அதுபோலத்தான் கர்த்தர் அநேகருக்கு படிப்பையும், அந்தஸ்தையும் கொடுத்து உயர்த்தி, மேன்மைப்படுத்தும்போது, அவர்கள் தங்களுடைய தாழ்விலே தங்களை நினைத்தவரைத் துதிப்பதுமில்லை, தேடுவதுமில்லை. நான் படித்தேன், நான் சம்பாதித்தேன், நான் முன்னேறினேன் என்று பெருமையோடு பேசுகிறார்கள். வேதம் சொல்லுகிறது, “அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது” (1 தீமோ. 3:6).

பொல்லாத பிசாசுக்கு ஆண்டவரைவிட பெரியவன் என்ற எண்ணம் வந்தது. அவன் பெருமையடைந்தான். ஆதலால்தான் பரலோகத்திலிருந்து கீழே விழத்தள்ளப்பட்டான். ஆகவே அந்த பெருமையிலும், வீழ்ச்சியிலும் நீங்கள் பங்கு கொள்ளக் கூடாது. எப்போதெல்லாம் உங்கள் உள்ளத்தில் பெருமையான எண்ணங்கள் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழிகளை நோக்கிப் பார்ப்பீர்களாக!

ஒரு மந்திரி, வெளியே செல்லும்போதெல்லாம் ஒரு பெட்டியை தன்னோடு எடுத்துக்கொண்டு செல்லுவார். அதைக் கண்ட சிலர், ராஜாவினிடத்தில் போய், ‘இராஜாவே இவர் எங்கு போனாலும் விலை உயர்ந்த முத்துக்கள் அடங்கிய பெட்டியைத் தூக்கிக்கொண்டு போகிறார். உங்களை ஏமாற்றி நிறைய சேர்த்து வைத்திருக்கிறார்’ என்று புகார் சொன்னார்கள்.

ஒரு நாள் அந்த மந்திரியை இராஜா வழிமறித்து, பெட்டியைத் திறக்கும்படி கட்டளையிட்டார். பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் வெறும் கந்தல் துணிகளே இருந்தன. மந்திரி ராஜாவை நோக்கி: “இராஜாவே இவையெல்லாம் நான் ஏழ்மை நிலைமையிலிருந்த நாட்களில் உடுத்தியிருந்த துணிகள். நீங்கள் என்னை மிகவும் உயர்த்தி மந்திரியாக்கி விட்டீர்கள். எனினும் நான் பெருமையடைந்துவிடாதபடிக்கு என் தாழ்மையை நினைவுகூரும்வண்ணம் அதை எப்போதும் என்னோடுகூட எடுத்துச் செல்லுகிறேன்” என்றார்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை உயர்த்தும்போது, அவருக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும் தாழ்மையோடும், அடக்கத்தோடும் நடந்துகொள்ளுங்கள். அப்போது அவர் மென்மேலும் உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- “நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது” (சங். 136:23).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.