AppamAppam - Tamil

அக்டோபர் 07 – வழிகளும், ஆறுகளும்!

“நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்” (ஏசா. 43:19).

வனாந்தரம் என்பது தண்ணீரற்ற இடம்; நிழல்களற்ற வெப்பமான பகுதி; எந்த மேன்மையும், எந்த ஆசீர்வாதமும் இல்லாத கடினமான பாதை. ஆகவேதான், வனாந்தரமான பாதை என்பது, எல்லாராலும் கைவிடப்பட்ட வாழ்க்கையின் அனுபவத்தையும், தனிமையின் சோகத்தையும், கண்ணீரின் பாதையையும் குறிப்பிடுவதாய் இருக்கிறது.

ஒரு நாள் ஆகார், சாராளுடைய கொடுமை தாங்கமுடியாமல் சூர் வனாந்தரத்திலே துயரத்தோடு நடக்கவேண்டியதாயிற்று. கர்த்தரோ, வனாந்தர பாதையிலே அவளைச் சந்தித்து, ஆற்றித் தேற்றும்படி சித்தங்கொண்டார். அவள் ஒரு அடிமைப்பெண்தானே என்று கர்த்தர் புறக்கணித்து விடவில்லை. அவளையும், அவளுடைய சந்ததியையும் ஆசீர்வதித்தார். இருளுக்குள்ளிருந்த அவளை கர்த்தரின் சந்திப்பு பெரிய வெளிச்சத்துக்குள் கொண்டு வந்தது. கர்த்தர் வனாந்தரத்தில் வழிகளை உண்டாக்குகிறவர்.

மோசேயைப் பாருங்கள்! அவர் பார்வோனுடைய அரண்மனையிலே சீரும், சிறப்புமாய் வாழ்ந்தவர். இராணுவப்பயிற்சியும், வில்வித்தையும், வாள்வித்தையும் கற்றவர். அந்தோ பரிதாபம்! தேசத்தை அரசாள வேண்டிய அவருடைய கைகள் ஆடுகளை மேய்க்கும் கோலை ஏந்த வேண்டியதாயிற்று. ஓரேப் பர்வதத்திற்கு ஆடுகளை மேய்த்துக்கொண்டு வந்தபோது, கர்த்தர் அவரை சந்திக்க சித்தமானார். அந்த வனாந்தரத்திலே அவனுக்கு ஒரு வழி உண்டாயிற்று. இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்லுகிற பெரிய பொறுப்பை கர்த்தர் அவரது கைகளிலே கொடுத்தார்.

வேதம் சொல்லுகிறது: “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்” (உபா. 32:10). அந்தக் கர்த்தர் உங்களுடைய வனாந்தர வாழ்க்கையை ஆசீர்வாதமான நீரூற்றாக்குவார்.

இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயின் தலைமையிலே வனாந்தரத்தில் வழிநடந்து வருவதை பிலேயாம் கண்டான். கர்த்தர் அவர்கள் மத்தியிலே வாசம் பண்ணினதைக் கண்டான். ஆசரிப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் கர்த்தர் எழுந்தருளி இருந்தார். பிலேயாம் அதைக்கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு, “யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!” (எண். 24:5) என்று பிரமித்தான்.

மட்டுமல்ல, வனாந்தரத்திலுள்ள அந்த இஸ்ரவேல் ஜனங்களின் வாசஸ்தலங்கள் “பரவிப்போகிற ஆறுகளைப் போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப் போலவும், கர்த்தர் நாட்டின சந்தன மரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது” (எண். 24:6) என்று தீர்க்கதரிசனம் உரைத்தார். தேவபிள்ளைகளே, நீங்கள் இருக்கும் இடம் வனாந்தரமாயினும் அதிலேயும் உங்களுக்குக் கர்த்தர் வழிகளையும் ஆறுகளையும் ஏற்படுத்தித் தருவார்.

நினைவிற்கு:- “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப் போலச் செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்” (ஏசா. 35:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.