AppamAppam - Tamil

செப்டம்பர் 28 – வருகையிலே சேர்த்துக்கொள்ளுதல்!

“நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவான் 14:3).

“நான் சேர்த்துக்கொள்ளுவேன்” என்பது கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தம். ஆண்டவரின் இரண்டாம் வருகையிலே நாம் எல்லாரும் அவரோடுகூட சேர்த்துக்கொள்ளப்படுவோம். ஒரு பெரிய காந்தம் வைக்கப்பட்டால், இரும்புத் தூள்கள் எல்லாம் அதை நோக்கி வேகமாக இழுக்கப்பட்டு, காந்தத்தோடு சேர்ந்துகொள்ளுகிறதுபோல இயேசுவோடுகூட நாமும் ஒன்றாய் சேர்ந்து கொள்ளுவோம்.

அப்.பவுல், “அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங் குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்” (2 தெச. 2:1) என்று எழுதுகிறார். நம்முடைய கண்கள், கர்த்தருடைய வருகையிலே சேர்த்துக் கொள்ளப்படுகிறதை ஆவலோடு எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றன.

நாம் வாழுகிற இந்த உலகமே வெடித்துச் சிதறுதலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. உலகமெங்கும் விஞ்ஞானிகள் அணு ஆயுதங்களைச் செய்து வைத்து, அவை வெடித்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள். உலகத்தார் உலகம் வெடித்துச் சிதறுதலை எதிர்நோக்கியிருக்கிறார்கள். நாமோ, இவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், கர்த்தருடைய வருகையிலே சேர்க்கப்படுதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

கர்த்தருடைய வருகையிலே உலர்ந்த எலும்புகள் ஒன்றாய்க்கூடி, ஒன்றோடொன்று சேர்ந்துகொள்ளும். உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கிலே நடந்த எசேக்கியேல் தீர்க்கதரிசி சொல்லுகிறார், “ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாக்கி ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது” (எசே. 37:7).

நீங்கள் ஒருவரோடு ஒருவர் இசைந்து, இணைந்து, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாகும்படி, ஆவியானவர் இன்றைக்கு உங்களை ஒன்றாய் இணைத்திருக்கிறார். நீங்கள் எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்திருந்தாலும், சிலுவையண்டை வந்து நிற்கும்போது, அந்தக் கல்வாரியின் இரத்தம் உங்களை ஒரே குடும்பமாய் சேர்த்து இணைத்துக்கொள்ளுகிறது. நீங்கள் ஒரே குடும்பமாய், ஒரே சரீரத்தின் அவயவங்களாய் ஒரே மாளிகையாய் இணைக்கப்படுகிறீர்கள்.

நீங்கள் எப்பொழுதும் தேவனோடும், தேவனுடைய பிள்ளைகளோடும் ஐக்கியம் கொண்டிருக்க வேண்டியது அவசியம். ஒருமனமாய், ஒருமனப்பாட்டில் திகழ வேண்டியது அவசியம். இயேசு, “பிதாவே நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக் கொள்ளுகிறேன்” (யோவான் 17:21) என்று ஜெபித்தார்.

தேவபிள்ளைகளே, கர்த்தரிடத்தில் நீங்கள் ஒன்று சேரும்போது, கர்த்தர் உங்களை இணைக்கிறார், ஒருமனப்பாட்டைத் தந்தருளுகிறார்.

நினைவிற்கு:- “ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும்… கட்டப்பட்டு வருகிறீர்கள்” (1 பேதுரு 2:4,5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.