No products in the cart.
செப்டம்பர் 19 – செய்து முடிக்கிறவர்!
“கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” (சங்.138:8).
தாவீது ராஜா தன்னுடைய பாரங்கள், கவலைகள் எல்லாவற்றையும் கர்த்தர் மேல் வைத்துவிட்டு மிகுந்த சமாதானத்துடன், “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” என்று சொல்லுகிறார். இது எத்தனை அருமையான விசுவாச அறிக்கை! கர்த்தர் மேல் உங்கள் பாரங்களை வைக்கும்போது, அவர் நிச்சயமாகவே உங்களை ஆதரிப்பார். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேதுரு 5:7) என்று வேதம் சொல்லுகிறது.
“செய்து முடிப்பார்” என்ற வார்த்தையானது, அதனுடைய மூலபதத்தில், “கர்த்தர் ஆரம்பித்த வேலையைப் பூரணமாய்ச் செய்து நிறைவேற்றுகிறவர்” என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாருங்கள், மனுஷர் ஆரம்பிக்கிற பல வேலைகளை அவர்களால் நிறைவேற்ற முடியாமல் போகிறது. சில வேளைகளில் அவர்கள் திட்டம் தீட்டியதையே மாற்றிக் கொள்ளுகிறார்கள். ஆனால் நம்முடைய தேவன், ஆரம்பித்த வேலையைப் பாதி வழியிலே நிறுத்தி விடுகிறவர் அல்ல. அவர் மனம்மாற ஒரு மனுபுத்திரனும் அல்ல. யோபு சொல்லுகிறார், “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது” (யோபு 42:2).
சிருஷ்டிப்பிலே கர்த்தர் நமக்காக யாவையும் செய்து முடித்தார். மனிதனை உருவாக்குவதற்கு முன்பாகவே, சிருஷ்டிப்பிலே முதல் ஐந்து நாட்களும் மனிதனுக்கு என்னென்ன தேவை உண்டோ, அத்தனையும் நினைவுகூர்ந்து அவனுக்கு சிருஷ்டித்துக் கொடுத்தார். ஒளி கொடுக்க சூரியன், சந்திரன், நட்சத்திரங்களைச் சிருஷ்டித்தார். கனிதரும் செடிகளையும், மரங்களையும் உண்டாக்கினார். ஆகாயத்துப் பறவைகளை உண்டாக்கினார். மிருக ஜீவன்களையும், கடலில் நீந்தும் மீன்களையும் உண்டாக்கினார். எல்லாவற்றையும் சிருஷ்டித்து முடித்த பின்புதான் கடைசியாக மனுஷனை அவருடைய சாயலில் படைத்தார். இது மனிதனுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு பெரிய பாக்கியம் அல்லவா?
அவர் சிருஷ்டிப்பிலே மாத்திரமல்ல, சிலுவையிலேயும் யாவற்றையும் செய்து முடித்தார். இரத்தம் சிந்தி பாவமன்னிப்பை ஏற்படுத்தினார். தழும்புகளை ஏற்றுக்கொண்டு குணமாக்கும் கிருபைகளைத் தந்தார். சாபமான முள்முடியைத் தலையின்மேலே சுமந்துகொண்டு சாபத்தின் முதுகெலும்பைத் தகர்த்தார். சத்துருவின் தலையை நசுக்கி ஜெயத்தைத் தந்தார். எல்லாவற்றையும் செய்து முடித்ததினால்தான், “முடிந்தது” என்று வெற்றி முழக்கமிட்டு, தன்னுடைய ஜீவனைப் பிதாவின் கரங்களிலே ஒப்புக்கொடுக்க அவரால் முடிந்தது.
மட்டுமல்ல, நித்தியத்திலும் அவர் நமக்காக ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ணும்படி பரலோகம் சென்றிருக்கிறார். ஆறு நாட்களில் உருவாக்கின உலகமே இத்தனை அழகுமிக்கதாய் இருந்தால், இரண்டாயிரம் ஆண்டுகளாக இயேசு நமக்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கிற வாசஸ்தலங்கள் எத்தனை மேன்மையுடையதாய் இருக்கும்! தேவபிள்ளைகளே, நித்தியத்திலும் அவர் உங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிறவர்.
நினைவிற்கு:- “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்தி வருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” (பிலி. 1:5,6).