AppamAppam - Tamil

செப்டம்பர் 18 – என்னத்தைச் செலுத்துவேன்?

“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” (சங். 116:12).

நன்றியுள்ள உள்ளம் கர்த்தரை மகிழ்விக்கிறது. கர்த்தர் செய்த எல்லா நன்மைகளையும் நினைவுகூர்ந்து உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவரை ஸ்தோத்தரிக்கும்போது, கர்த்தர் இன்னும் அநேக ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழிந்தருளுவார்.

வாழ்க்கையிலே மிகத்தாழ்மையான நிலையிலிருந்து, மிகவும் மேன்மையாக உயர்த்தப்பட்டவருடைய சரித்திரம்தான் தாவீதின் சரித்திரம். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அவரை இஸ்ரவேலிலே மிகப் பெரிய ராஜாவாய் கர்த்தர் உயர்த்தியருளினார். எல்லாக் கஷ்டமான சூழ்நிலையிலும் கர்த்தர் தாவீதோடிருந்தார். தாவீதுக்கு ஒத்தாசை செய்தார். மேன்மைப்படுத்தினார்.

தாவீது அந்த நன்மைகளையெல்லாம் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். இஸ்ரவேல் ஜனங்களிடம், “நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது” (சங். 136:23) என்று அறிவிக்கிறதைப் பாருங்கள்! மட்டுமல்ல, நன்றியால் நிறைந்த அவர் கர்த்தரிடத்தில் மூன்று காரியங்களை நிறைவேற்றத் தீர்மானித்தார்.

  1. தொழுது கொள்ளுவேன்:- “இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுவேன்” (சங். 116:13). தொழுது கொள்ளுவேன் என்ற பதத்திற்கு பணிந்து கொள்ளுவேன், தொழுது அவரை வணங்குவேன், கர்த்தரைப் போற்றி உயர்த்துவேன், அவருக்கு கனத்தையும், மகிமையையும் செலுத்துவேன் என்பதெல்லாம் அர்த்தங்களாகும். கர்த்தர் பெரியவரும், எல்லா தொழுகைக்கும் பாத்திரருமாய் இருக்கிறார். நாம் அவரைத் தொழுதுகொள்வதை அவர் விரும்புகிறார், எதிர்பார்க்கிறார்.
  2. ஸ்தோத்திர பலி செலுத்துவேன்:- “நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்” (சங். 116:17). மிகுந்த ஒரு ஆசீர்வாதமான பலியைத் தாவீது கண்டுபிடித்தார். அதுதான் ஸ்தோத்திர பலி. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலி. கர்த்தர் அந்தப் பலியின்மேலேயும் விருப்பமுள்ளவராய் இருக்கிறார்.
  3. பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்:- “நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்” (சங். 116:14). தன்னை உயர்த்திய ஆண்டவரை வெறும் வாயால் மாத்திரம் போற்றிக் கொண்டிராமல், பொருத்தனைகளை நிறைவேற்றி செய்கைகளினாலும் கனப்படுத்த தாவீது தீர்மானித்தார்.

வேதம் சொல்லுகிறது: “உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம் பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்” (நீதி. 3:9,10). தேவபிள்ளைகளே, கர்த்தர் செய்த நன்மைகளை நீங்கள் மறக்காமல் நன்றிகூர்ந்து, ஸ்தோத்திரம் செலுத்தினால், கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- “நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்” (2 கொரி. 9:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.