No products in the cart.
செப்டம்பர் 07 – கனியாகிய சமாதானம்!
“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம்…” (கலா. 5:22).
ஆவியின் கனியாகிய சமாதானத்தைப் பெறும்போதும் மகிழ்ச்சி; மற்றவர்களுக்குக் கொடுக்கும்போதும் மகிழ்ச்சி. இந்த ஆவியின் கனியாகிய சமாதானம் தனித்தும் செயல்படும்; மற்ற பண்புகளோடு சேர்ந்தும் செயல்படும். அன்பு, சந்தோஷம், சமாதானம் ஆகியவை எல்லாம் ஒன்றோடொன்று நெருங்கிய சம்பந்தம் உள்ளவை.
இயேசுவை நோக்கிப் பாருங்கள்! அவரில் அத்தனை ஆவியின் கனியும் நிறைவாய்க் காணப்பட்டன. நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது அவருடைய குணாதிசயங்கள் உங்களில் வெளிப்படும். உங்கள் வாழ்க்கை சமாதானம் நிரம்பியதாய் இருக்க அதுவே வழி.
ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெறும்போது, ஆவியின் வரங்களையும், கனியையும், பரலோக தேவன் உங்களுக்குள் கொண்டு வருகிறார். ஆனால் ஆவியின் கனியை நீங்கள் தேவனுக்கு சந்தோஷத்தோடே கொடுக்கிறீர்களா? வேதம் சொல்லுகிறது, “நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்” (உன். 7:13).
சமாதானம் என்னும் இந்தக் கனியைப் பெற்றுக்கொள்ள நீங்கள் கர்த்தரில் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும். இயேசு சொன்னார், “என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனி கொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனி கொடுக்கமாட்டீர்கள்” (யோவான் 15:4).
ஒரு நாத்திகர், மனிதனின் படைப்புகள் எல்லாவற்றையும் பேசிவிட்டு, “கடவுள் இல்லை; அப்படியே கடவுள் இருந்தாலும் அவர் நமக்குத் தேவையில்லை” என்று காரசாரமாகப் பேசினார். ஒரு கிறிஸ்தவ சகோதரன் அந்த நாத்திகவாதியை நோக்கி, “ஐயா, ஒரு சிறு எறும்பைப் பாருங்கள். அது எவ்வளவு சமாதானமாக ஓடித் திரிகிறது. உங்களால் உயிருள்ள ஒரு சிறு எறும்பைச் சிருஷ்டிக்க முடியுமா? அந்த எறும்புக்கு இருக்கும் சமாதானத்தைப் பெற முடியுமா?” என்று கேட்டார்.
அந்த நாத்திகர், எவ்வளவோ நாத்திகவாதம் பேசியபோதிலும்கூட அவருடைய சொந்த வாழ்க்கையிலோ சமாதானமில்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். ஆகவே, அவர் அந்த கிறிஸ்தவ சகோதரனைப் பார்த்து மனந்திறந்து, “உண்மைதான். மனித ஞானத்தால் சமாதானத்தைப் பெற முடியாது” என்று ஒப்புக் கொண்டார். ஆம், தேவ சமாதானம் என்பது தேவன் அருளும் ஈவு. மாறிவிடும் சூழ்நிலைகள் மத்தியிலும் சமாதானம் நிலைத்து நிற்கும். நிலைத்திருக்கிற ஒரே சமாதானம் தேவன் தருகிற சமாதானம்தான். அதனுடைய முடிவும் இனிமையானது.
வேதம் சொல்லுகிறது, “நீ உத்தமனை நோக்கி: செம்மையானவனைப் பார்த்திரு, அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்” (சங். 37:37). தேவபிள்ளைகளே, பரிசுத்த ஆவியின் உதவியால் நிலையான, நிரந்தரமான சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். இது விசுவாசிகளுக்கு மட்டுமே கிடைக்கிற பெரிய பாக்கியம். ஆவியானவர் இலவசமாய் அருளும் மேன்மையான கனி.
நினைவிற்கு:- “தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது” (ரோமர் 14:17).