No products in the cart.
செப்டம்பர் 06 – தேவ சமாதானம் ஆளக்கடவது!
“தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” (கொலோ. 3:15).
நம்முடைய இருதயங்களை எது ஆளுகை செய்கிறது? பவுல் அப்போஸ்தலன் சொல்லுவது போல தேவ சமாதானமா அல்லது சாத்தான் கொண்டு வருகிற குழப்பங்கள், கோபங்கள், வைராக்கியங்கள், பிரிவினைகள் ஆகியவையா? தேவ சமாதானமே உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது.
ஆண்டவர் அரசாளுகிறவராக இருதயத்தின் மத்தியில் வீற்றிருக்கும்போது, ஆவியானவரும் உள்ளேயிருப்பார். அவரைச் சுற்றிலும் ஆவியின் கனியும் இருக்கும். ஆனால் பிசாசானவன் ஆளுகை செய்யும்போது, இயேசுவும், ஆவியானவரும் துக்கத்துடன் வெளியே நிற்பார்கள். பிசாசானவன் நடுமையத்தில் அரியணையில் வீற்றிருப்பான். அவனைச் சூழ பாம்பு, தவளை, பன்றி போன்றவை காணப்படும்.
ஒரு நாட்டை யார் ஆளுகை செய்கிறார்களோ, அவர்களைப் பொறுத்துதான் அந்நாட்டின் செய்கைகளும் அமையும். ஒரு தேசத்தை கம்யூனிஸ்ட் அரசாட்சி செய்தால், அவர்களின் கொள்கைகள்தான் அங்கு முன் நிற்கும். அதுபோல, ஒரு கட்சி தேசத்தில் ஆட்சிக்கு வந்தால், தங்களுடைய கொள்கைகளைத்தான் செயல்படுத்த முயற்சிக்கும். சிந்தித்துப் பாருங்கள். சமாதான பிரபுவாகிய இயேசு உங்கள் இருதயத்தை ஆளுகை செய்தால், உங்கள் செய்கைகள் கர்த்தரைப் பிரதிபலிப்பவையாயிருக்கும். அங்கே தேவ சமாதானம் பூரணமாய் நிரம்பியிருக்கும்.
அநேகர் தங்களை ஆளுகிறவர்கள் யார் என்பதுபற்றி கவலைப்படுவதில்லை. இதனால்தான் சில தேசங்கள் காட்டுமிராண்டிகளின் தேசங்களாக மாறிவிடுகின்றன. மேலும் அநேக தேசங்களில் ‘வலிமையுள்ளவனுக்கே உலகம்’ என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.
பவுல் அப்போஸ்தலன் ஆளுகை என்பதற்கு உபயோகித்திருக்கும் கிரேக்க வார்த்தை Brabeueto. இது விளையாட்டு அரங்கத்தில் பயன்படுத்தும் ஒரு வார்த்தை. அதற்கு ஆட்ட நடுவர் (Umpire) என்பது அர்த்தமாகும். தேவ சமாதானம் உங்கள் ஆட்ட நடுவராக இருந்தால், உங்களுடைய வாழ்க்கை ஒழுங்கும், கிரமமுமாய் அமையும். உங்கள் வாழ்க்கையில் நீக்க வேண்டியவைகளை நீக்கிப்போட்டு, சேர்க்க வேண்டியவைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தேவ சமாதானம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை ஆளாவிட்டால், எவ்வளவு பணமிருந்தும், எவ்வளவு செல்வம் இருந்தும் அவற்றால் அவனுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. உங்களுடைய உள்ளத்தில் சமாதானம் நிரம்பியிருக்க வேண்டுமென்றால், இயேசு உங்களை ஆளுகை செய்ய வேண்டும்.
தேவபிள்ளைகளே, இருளின் ஆதிக்கத்தை விட்டுவிட்டு சமாதானத்தின் ஆதிக்கத்திற்குள் வாருங்கள். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களை ஆண்டு கொள்ளும்.
நினைவிற்கு:- “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும் போதும்; வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசா. 30:21).