No products in the cart.
செப்டம்பர் 03 – பூமியிலே சமாதானம்!
“…பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்” (லூக். 2:14).
“பூமியிலே சமாதானம்” உண்டாக வேண்டுமென்ற விருப்பம் மனுஷருக்கு மாத்திரமல்லாமல் தேவ தூதர்களுக்கும் இருந்தது. இயேசு இந்த உலகத்தில் பிறந்தவுடன், தேவதூதர்கள் விண்வெளியிலே தோன்றி, மேய்ப்பர்களுக்குச் சொன்ன நற்செய்தி, “பூமியிலே சமாதானம்” என்பதாகும்.
பூமியிலே சமாதானம் என்பது குறித்து சற்று தியானிப்போம். வேதம் சொல்லுகிறது, “புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக் குட்டியும், பாலசிங்கமும், காளையும் ஒருமித்திருக்கும்; பசுவும் கரடியும் கூடி மேயும், சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும்” (ஏசாயா 11:6-8). இக்காரியங்களை நினைத்துப் பார்க்கும்போதே இருதயத்தில் சந்தோஷத்தை உணருகிறோம் அல்லவா? இவை நடக்கும் அந்த நாள் எத்தனை மகிழ்ச்சியான ஒரு நாளாய் இருக்கும்!
சமாதானத்தை விரும்பி வாழ்ந்த ஒரு நாட்டுக்கு விரோதமாக இன்னொரு நாடு படையெடுத்து வந்தது. அந்தப் பட்டணத்திலுள்ள அனைவரையும் வெட்டிக் கொன்று, அந்த நகரத்தை தீக்கொளுத்த வேண்டுமென்று படைத்தளபதி உறுதியான உத்தரவு போட்டிருந்தான். அந்த நாட்டை அழிக்கும்படி சிப்பாய்கள் அங்கு வந்தபோதோ, அந்த ஊர் மக்கள் அவர்களை மிகவும் அன்போடு வரவேற்றார்கள்.
இளம் குழந்தைகள் மலர்களைக் கைகளிலே ஏந்திக் கொண்டு மகிழ்ச்சியான முகத்தோடு வரவேற்றார்கள். பெண்கள் வீடுகளின் மொட்டைமாடிகளில் நின்று பாசத்தோடு கைகளை அசைத்தார்கள். ஆண்கள் சிரித்த முகமாக தங்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இவற்றைக் கண்ட போர் வீரர்கள் தாங்கள் வந்த நோக்கத்தை மறந்தவர்களாய் குழந்தைகளைத் தூக்கி பேரானந்தத்தோடு முத்தமிட ஆரம்பித்து விட்டனர். அந்த அன்புள்ள பட்டணத்தின்மேல் நாங்கள் தாக்குதல் நடத்துவது எப்படி, ஒருபோதும் நாங்கள் அப்படிச் செய்யமாட்டோம் என்று போரிட வந்த சிப்பாய்கள் போராயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு சமாதானமாய்த் திரும்பி சென்றார்கள்.
இயேசு இந்த உலகத்தில் அன்பை வெளிப்படுத்த வந்தார். ஒரு கன்னத்தில் அறைந்தவர்களுக்கு மறுகன்னத்தைத் திருப்பிக் காட்ட வந்தார். சத்துருக்களையும் சிநேகிக்க வந்தார். அவருடைய அன்பு, பூமியிலே சமாதானத்தைக் கொண்டு வருகிறது. சமாதானப் பிரபுவுக்கு உங்கள் வாழ்க்கையில் இடம் கொடுப்பீர்களென்றால், முதலாவது உங்கள் உள்ளத்தில் சமாதானமும், பின்பு உங்கள் குடும்பத்தில் சமாதானமும், அடுத்து தேசத்தில் சமாதானமும், முடிவாக பூமியெங்கும் சமாதானமும் நிலவும்.
தேவபிள்ளைகளே, பூமியிலே சமாதானத்திற்காக ஜெபியுங்கள். சமாதானப் பிரபுவை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள் என்ற வார்த்தையின்படியே நீங்கள் பாக்கியவான்களாய் இருப்பீர்கள்.
நினைவிற்கு:- “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக” (எபே. 1:2).
