No products in the cart.
செப்டம்பர் 01 – உனக்குச் சமாதானம்!
“உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்” (நியாயா. 6:23,24).
நமதருமை ஆண்டவர் சமாதானக் கர்த்தர். ‘சமாதானப்பிரபு’ என்பது அவருடைய நாமங்களில் ஒன்றாகும் (ஏசா. 9:6). அவர் மூலமாக நமக்கு சமாதானம் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. தேவ சமாதானமானது, பரலோகத்திலிருந்து நம்மை நோக்கி இறங்கி வருகிறது.
ஒரு முறை பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடத்தில் வந்து, “ஆண்டவரே, எங்களுக்கு இரங்கும்” என்று கதறினார்கள். அவர்களுடைய நிலையைப் பார்த்தவுடனே கிறிஸ்துவின் உள்ளம் உருகிற்று. உடனே அந்த பத்து பேருக்கும் தெய்வீக சுகத்தை வாக்களித்து, ‘நீங்கள் போய் உங்களை உங்களுடைய ஆசாரியர்களுக்குக் காண்பியுங்கள்’ என்று சொன்னார். அவர்கள் போகிற வழியிலேயே, அவர்களுடைய சரீரங்கள் அற்புத சுகத்தையடைந்தன.
அந்த பத்துபேரில் ஒருவன், இயேசுவினிடத்திலே நன்றி செலுத்த வந்தான். கர்த்தர் “நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்று சொல்லி அவனை ஆசீர்வதித்து அனுப்பினார். அன்புள்ள கர்த்தர் உங்களுக்கு சரீர சுகத்தையும், ஆத்தும இரட்சிப்பையும் மாத்திரமல்லாமல், பூரண சமாதானத்தையும் தருகிறவராய் இருக்கிறார்.
அந்த சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள இயேசுவண்டை வருவீர்களா? இயேசு “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என்று அன்போடு அழைக்கிறார். இளைப்பாறுதல் என்பது தேவசமாதானம்தானே! இன்றைக்கு, உலகமே சமாதானமில்லாமல் தவிக்கிறது. ‘துன்மார்க்கருக்குச் சமாதானமில்லை’ என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசாயா 48:22).
ஒரு சமயம், சில மாணவர்கள் தங்களுடன் படித்துவந்த ஒரு கிறிஸ்தவ மாணவனிடம் அவர்களெல்லாம் பலவித கஷ்டங்களாலும், தேவைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவனால் மட்டும் எப்படி சமாதானத்துடன் இருக்க முடிகிறது என்று கேட்டார்கள். அதற்கு அவன், “நான் ஒவ்வொருநாளும் அதிகாலையில் சமாதானப் பிரபுவாகிய இயேசுகிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து அவரைத் துதிப்பேன். உலகம் கொடுக்கவோ, எடுக்கவோ முடியாத தேவ சமாதானம் என் இருதயத்தை ஆளுகிற வரையிலும் நான் அவரைத் துதித்துக் கொண்டேயிருப்பேன். அது மட்டுமல்லாமல், எந்த பிரச்சனை வந்தாலும், அதை நான் அவர் பாதங்களில் வைத்துவிட்டு, ‘அவர் பார்த்துக்கொள்ளுவார்’ என்னும் விசுவாசத்துடன் இருந்துவிடுவேன். எந்த பாரத்தையும் நான் என்மீது சுமக்காததினாலேயே என்னால் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் சமாதானத்துடனும் இருக்க முடிகிறது” என்றான்.
தேவபிள்ளைகளே, சந்தோஷத்தையும், சமாதானத்தையும் பெற்றுக்கொள்ள நீங்களும் இந்த வழியையே பின்பற்றுவீர்களாக!
நினைவிற்கு:- “அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்” (பிலி. 4:7).
