AppamAppam - Tamil

ஆகஸ்ட் 29 – சீஷராக்குங்கள்!

“நீங்கள் புறப்பட்டுபோய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி….” (மத். 28:19).

“சீஷராக்குங்கள்” என்பது கர்த்தர் பரலோகத்திற்கு ஏறிச்செல்லுவதற்கு முன்பு சீஷர்களுக்குக் கொடுத்த கடைசி கட்டளை ஆகும். கர்த்தர் நமக்குக் கொடுக்கும் கட்டளையும் இதுதான். ஆம், கர்த்தரை பின்பற்றுகிற சீஷர்கள் பெருகவேண்டும். அந்த சீஷர்கள் உலகம் முழுவதையும் நிரப்ப வேண்டும். ஒரு மனுஷனை கிறிஸ்தவனாக்குவது எளிது. ஆனால் சீஷனாக்குவது சற்று கடினமானது.

இயேசு சீஷத்துவத்தை உருவாக்கினார். “என்னைப் பின்பற்றி வாருங்கள்” என்று அழைத்தார். தன்னுடைய முழுமையான வாழ்க்கையின் மூலமாய், முன்மாதிரியின் மூலமாய், பரிசுத்த ஜீவியத்தின் மூலமாய் சீஷர்களை அவர் உருவாக்கினார். ஜெபிப்பதற்கு அவர் கற்றுக்கொடுத்தார். மாதிரி ஜெபத்தை சொல்லிக் கொடுத்தார். மாத்திரமல்ல, கெத்செமனே தோட்டத்திலே அவர் ஜெபித்து தனது ஜெப ஜீவியத்தையே அவர்களுக்கு முன் மாதிரியாக்கினார். பரிசுத்தத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். தன்னுடைய வாழ்க்கையில் கறைதிரை இல்லாதவராக வாழ்ந்து பரிசுத்த ஜீவியத்திற்கு முன்மாதிரியானார். அன்பைக் குறித்து போதித்தார். தன்னுடைய முழு அன்பையும் கல்வாரியிலே ஊற்றிக்கொடுத்து, தம்முடைய உச்சிதமான அன்பை வெளிப்படுத்தினார்.

இன்று தேவனுடைய ஊழியக்காரர்களாக அநேக பிரசங்கிமார்களும், போதகர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு தகப்பனைப்போல அல்லது ஒரு சகோதரனைப் போல அன்பு செலுத்தி, முன்மாதிரியாய் வழி நடத்திச் செல்கிறவர்களையே நம் இருதயம் நாடுகிறது. ஏராளமாக பிரசங்கிப்பவர்களைப் பார்க்கிலும், சாட்சியுள்ள ஜீவியத்துடன் தலைமை தாங்கி நடத்திச் செல்கிறவர்களையே உள்ளம் விரும்புகிறது. ஆகவேதான் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் நீங்கள் கிறிஸ்தவர்களை உருவாக்குங்கள் என்று சொல்லாமல், சீஷராக்குங்கள் என்று கட்டளையிட்டார்.

இயேசுகிறிஸ்து ஊழியத்தை ஆரம்பித்தபோது பன்னிரெண்டு சீஷர்களை தெரிந்தெடுத்தார். பிறகு அது எழுபதாய் உயர்ந்தது. அதன்பின் நூற்று இருபதாய் மாறினது. பின் இந்த சீஷத்துவம் உலகம் முழுவதும் வேகமாய்ப் பரவ ஆரம்பித்தது (அப். 6:7). சீஷத்துவம் பெருகவேண்டுமென்றால், வேதவசனம் விருத்தியடைய வேண்டும். வேத வசனத்தின் அடிப்படையிலும், முன் மாதிரியான ஜீவியத்தின் மூலமாகவும்தான் சீஷத்துவத்தை கட்டி எழுப்ப முடியும். அஸ்திபாரமான கிறிஸ்துவின் மேல், அழியாத வித்தாகிய ஜீவ வசனத்தின்மேல் எழுப்பப்படும் ஆவிக்குரிய மாளிகையான சீஷத்துவமே என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

அப். பவுல், அவருடைய ஊழியத்திலே உருவாக்கின சீஷர்களிலே தீமோத்தேயு, தீத்து போன்றவர்கள் மிகவும் விசேஷமானவர்கள். அவர் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, “கிறிஸ்தவனான தீமோத்தேயுவே” என்று எழுதாமல், “விசுவாசத்தில் உத்தமகுமாரனாகிய தீமோத்தேயுவுக்கு” என்று எழுதுகிறார் (1 தீமோ. 1:2). தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்காக சீஷர்களை உருவாக்கும்போது, அவர்கள் உங்களுடைய ஆவிக்குரிய குமாரர்கள் என்கிற அன்போடும், உணர்வோடும் உருவாக்குவீர்களாக!

நினைவிற்கு:- “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்” (யோவான் 13:35).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.