No products in the cart.
ஆகஸ்ட் 26 – நன்றி அறிதல்!
“இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர் களாயுமிருங்கள்” (கொலோ. 3:15).
கர்த்தர் செய்த நன்மைகள் ஏராளமானவை. அவற்றை நினைத்து, நினைத்து நன்றியறிதலுள்ளவர்களாயிருங்கள். கர்த்தர் கொடுத்த ஜீவன், சுகம், பெலன் எல்லாவற்றுக்கும் நன்றியறிதலுள்ளவர்களாயிருங்கள். இம்மைக்குரிய ஆசீர்வாதங்களினாலும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும், நித்தியத்திற்குரிய ஆசீர்வாதங்களினாலும் உங்களை ஆசீர்வதித்தவரை நன்றியோடு துதிப்பது எத்தனை பாக்கியமானது!
அமெரிக்க ஐக்கிய நாட்டிலே, “நன்றியறிதலின் நாள்” (Thanks giving day) என்று ஒரு நாளைக் குறித்திருக்கிறார்கள் அந்த நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஸ்தாபிக்கப்பட்ட தினமாகும். அடிமைத்தனத்தினின்று தங்களை விடுதலையாக்கி, சுதந்திரத்தைத் தந்த தேவனை, தேசத்தின் மக்களாக துதித்து நன்றி செலுத்தும் முக்கியமான நாள். அந்த நாளை இன்றைக்கும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
இன்று நாமும் ஒரு இராஜ்யமாகத் திகழுகிறோம். எப்பொழுது இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, அவருடைய பிள்ளைகளாய் மாற்றப்படுகிறோமோ, அப்பொழுதே இருளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்பட்டவர்களாயிருக்கிறோம் (கொலோ. 1:13). இப்பொழுது நாம் பரலோக அரசாங்கத்திலே செயல்பட்டு வருகிறோம். ஆகவே நாம் தேவனுக்கு நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஒரு கர்த்தருடைய ஊழியக்காரர் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு, தன்னுடைய பிறந்த நாளை மிகவும் விமர்சையாக கொண்டாடி வந்தார். ஆனால் இரட்சிக்கப்பட்ட பிறகோ சிந்திக்கலானார். நான் பிறந்தது பாவத்தில் அல்லவா? வளர்ந்தது பாவ சுபாவத்தில் அல்லவா? அந்த நாளை ஏன் நான் கொண்டாட வேண்டும்? அதற்கு பதிலாக மறுபடியும் பிறந்து, இரட்சிக்கப்பட்ட நாளைக் கொண்டாடலாமே. இரட்சகர் மகிமையின் ராஜாவாய் என் வாழ்க்கையில் பிரகாசித்த நாளைக் கொண்டாடலாமே என்று சொல்லி, அது முதற்கொண்டு ஒவ்வொரு வருடத்திலும் தான் இரட்சிக்கப்பட்ட நாளை நன்றியறிதலின் நாளாகக் கொண்டாடினார்.
கடைசி நாட்களில் அநேகர் நன்றியறிதல் இல்லாதவர்களா போய் விடுவார்கள் என்று வேதம் சொல்லுகிறது (2 தீமோ. 3:2). ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள் அப்படியிருக்கக்கூடாது. உங்களை நேசிக்கிற அன்பு இரட்சகரையும், அவர் சிலுவையிலே உங்களுக்காக பாடுபட்டதையும் மறவாமல், அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்பது மிகவும் அவசியம்.
தேவபிள்ளைகளே, அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களைப்போல வருஷத்தில் ஒரே ஒரு நாளை நன்றியறிதலின் தினமாக கொண்டாடாமல், அனுதினமும் கர்த்தருக்கு நன்றி செலுத்திக் கொண்டேயிருப்பீர்களாக. ஒவ்வொருநாளும் அவர் ஆயிரக்கணக்கான நன்மைகளை செய்து கொண்டிருக்கிறபடியினால் ஒவ்வொரு நிமிடமும் கர்த்தர் உங்களுக்கு பாராட்டுகிற அன்பையும், கிருபையையும் எண்ணி எண்ணி துதித்துக் கொண்டேயிருங்கள்.
நினைவிற்கு:- “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” (சங். 34:1).