No products in the cart.
ஆகஸ்ட் 16 – பூரணமாய் விளங்கும்!
“என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரி. 12:9)
கர்த்தருடைய பெலனானது, உங்களுடைய பெலவீனத்திலே பூரணமாய் விளங்கும். சில நேரங்களிலே கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே சில பெலவீனங்களை அனுமதிக்கிறார். எதற்காக? அவருடைய பெலன் உங்களுடைய வாழ்க்கையிலே பூரணமாய் விளங்கும்படிதான் பெலவீனங்களை அவர் அனுமதிக்கிறார்.
உங்களுக்குள்ளே பெலவீனங்கள் இருக்கும்போதுதான் நீங்கள் கர்த்தரை சார்ந்துகொள்ளுவீர்கள். இல்லையென்றால், கர்த்தருடைய கிருபையை சார்ந்துகொள்ளக்கூடிய தேவை இருக்காது. அதுமாத்திரமல்ல, கர்த்தருக்கு மகிமையை செலுத்தவுமாட்டீர்கள். பெலத்திற்கும், கிருபைக்கும் அவரையே முழுமையாய் சார்ந்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சில நேரங்களில் உங்களிலே பெலவீனங்களை அவர் அனுமதிக்கிறார்.
அப். பவுலுக்கு ஒரு பெலவீனம் இருந்தது. அவர் சொல்லுகிறார், “அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்” (2 கொரி. 12:7,8).
இந்த பெலவீனத்தை அவருடைய வாழ்க்கையில் கர்த்தரே அனுமதித்திருந்தார். அப். பவுலுக்கு, கர்த்தர் ஏராளமான தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் கொடுத்திருந்தார். இவை காரணமாக, எல்லாரைப் பார்க்கிலும் நானே சிறந்தவன் என்ற பெருமை அவருக்கு எழுவதற்கு வாய்ப்பு இருந்தது. ஆதலால்தான் அவர் மேன்மை பாராட்டாதபடிக்கு இந்த பெலவீனத்தைக் கர்த்தர் அனுமதித்தார்.
கர்த்தர் சொன்னார், ‘இந்த பெலவீனம் இருக்கிற வரைக்கும் உனக்குள்ளே பெருமைகள் வராது. நீ தாழ்மையோடு நடந்துகொள்ளுவாய். நீ என்னுடைய பெலத்தையே சார்ந்திருப்பாய். நான் உன்னை பயன்படுத்திக் கொண்டேயிருப்பேன்.
ஆகவே நீ பெலவீனத்தை பார்க்காதே. என்னுடைய கிருபையை பார். உன் பெலவீனத்திலே என் பெலன் பூரணமாய் விளங்கும்’ என்றார். அப். பவுல் அதை சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார். அவர் கர்த்தருடைய கிருபையையும், அவருடைய பெலத்தையுமே சார்ந்திருந்தபடியினால், கர்த்தர் அவரை வல்லமையாய் எடுத்து பயன்படுத்தினார்.
தேவபிள்ளைகளே, பெலவீனத்தைக் குறித்து நீங்கள் சோர்ந்து போகாதிருங்கள். நூறு சதவீதம் பூரணமாய் மாறினபின்பு எதையாவது சாதிக்கலாம் என்று காத்திருக்காதிருங்கள். உங்களுடைய பெலவீனத்தின் மத்தியிலும், நீங்கள் கர்த்தருக்கென்று பலத்த காரியங்களைச் செய்ய முடியும். எந்த அளவிற்கு கர்த்தருடைய கிருபையைச் சார்ந்திருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு கர்த்தருடைய பெலன் உங்களுடைய சரீரத்திற்குள்ளாய் பாய்ந்துகொண்டேயிருக்கும். அப்போது நீங்களும் கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்வீர்கள்.
நினைவிற்கு:- “பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்” (1 கொரி. 1:27).