No products in the cart.
ஆகஸ்ட் 03 – வசனத்தால் பரிசுத்தம்!
“வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” (2 தீமோ. 3:16).
தேவ ஆவியானவர் வேத வசனங்களை உங்களுக்கு அருளிச் செய்திருக்கிறார். எதற்காக தெரியுமா? “தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜன முள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோ. 3:16,17).
தேவனுடைய வசனம், பாவமுள்ள மனுஷனைக் கடிந்துக்கொள்ளுகிறது; சீர்திருத்துகிறது; நீதியை கற்றுக்கொடுக்கிறது; எல்லாவற்றிற்கும் மேலாக பரிசுத்தப்படுத்துகிறது. பரிசுத்தமாகுதலுக்கும், வேத வசனங்களுக்கும் ஆழமான தொடர்பு உண்டு. இயேசு சொன்னார்: “நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” (யோவான் 6:63).
பரிசுத்தமாகுவதற்கென்று வேதத்தில் அநேகம் வாக்குத்தத்தங்களை கர்த்தர் கொடுத்திருக்கிறார். அந்த வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டும்போது, பரிசுத்த ஜீவியம் உங்களுக்குள் உருவாகும். ஆகவே அந்த வாக்குத்தத்தங்களையெல்லாம் விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள். வேதம் சொல்லுகிறது, “நீங்கள்… கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” (ரோம. 6:14). “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவான் 8:36). “பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்” (எபி. 10:14).
பாவ சோதனைகள் வரும்போது, வேத வசனங்களை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். அவைகளை அறிக்கை செய்யுங்கள். பாவம் என்னை மேற்கொள்ளமாட்டாது என்று சொல்லுங்கள். என்னை பரிசுத்தமாக்குகிற தேவனுடைய கரத்தில் நான் இருக்கிறேன், என்னை யாரும் அவருடைய கரத்திலிருந்து பறித்துக்கொள்ள முடியாது என்று சொல்லுங்கள். சாத்தான் உங்களை விட்டு ஓடிப்போவான்.
வேதம் சொல்லுகிறது, “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபி. 4:12). பரிசுத்த பாதைக்கு வழி காட்டுவது தேவனுடைய வசனம்தான். வேதம் சொல்லுகிறது, “கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதக சிட்சையே ஜீவ வழி” (நீதி. 6:23). தாவீது சொல்லுகிறார்: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங். 119:105).
தேவபிள்ளைகளே, ஒவ்வொருநாளும் அதிகாலையில் எழுந்து வேதத்தை வாசியுங்கள். அந்த வேத வசனங்கள் உங்களோடு பேசட்டும்; உங்கள் வாழ்க்கையை வழிகாட்டிச் செல்லட்டும். வாசித்த வேத பகுதியின்படி நடக்கிறேனா, கீழ்ப்படிந்திருக்கிறேனா, அர்ப்பணித்திருக்கிறேனா, என்று ஆராய்ந்து பார்த்து, வேதவசனத்தின் பாதையிலே உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங். 139:24).
