No products in the cart.
ஆகஸ்ட் 01 – பரிசுத்தமுள்ள தேவன்!
“அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன” (வெளி. 4:8).
நம்முடைய தேவன் பரிசுத்தமுள்ள தேவன். அவருடைய குணாதிசயங்களில் பிரதானமானது அவருடைய பரிசுத்தமாகும். நீங்களும் அவரைப் போலவே பரிசுத்தத்திலே முன்னேறிச் செல்ல வேண்டுமென்று பரிசுத்த தேவன் வாஞ்சிக்கிறார். அப். யோவானை கர்த்தர் ஆவிக்குள்ளாக்கி, பரலோக ராஜ்யத்திற்குக் கொண்டு சென்று, அங்கே உள்ள காட்சிகளைக் காண்பிக்க சித்தமானார். அங்கே அவர்கள் கண்டது என்ன? வானசேனைகள் எல்லாம் கர்த்தரைப் “பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று இரவும், பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன.
இந்த வசனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பிலே, “பரிசுத்தர்” என்ற வார்த்தை மூன்று முறையும், வேறு சில மொழிபெயர்ப்புகளிலே ஒன்பது முறையும் எழுதப்பட்டிருக்கிறது. திரியேக தேவனானவர் “பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று மூன்று முறை துதிக்கப்படுகிறார். நம் தேவன் முப்பரிமாணமாகவும், பரிசுத்தராகவுமிருக்கிறார்.
அவர் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே பரிசுத்தராயிருந்தார். இப்பொழுதும் பரிசுத்தராயிருக்கிறார். இனி வரப் போகிற காலத்திலும் பரிசுத்தராயிருப்பார். நித்தியத்தின் துவக்கம் முதலே அவர் பரிசுத்தர்தான். தேவனுடைய பரிசுத்தம் நித்தியமானதாகவேயிருக்கிறது. அவருடைய அழகும், சாயலும், ரூபமும், பரிசுத்த மாகவேயிருக்கின்றன.
அந்த பரிசுத்தமுள்ள தேவன், உங்களையும் பரிசுத்தமாயிருக்கும்படி அழைத்திருக்கிறார். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் பரிசுத்தத்தில் அவருக்கு அக்கறையுண்டு. நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் பரிசுத்தத்தைக் குறித்து வைத்திருக்கிற அக்கறையைப் பார்க்கிலும், அவர் அதிக அக்கறையுள்ளவராயிருக்கிறார். பரிசுத்தமாகும்படியாக உங்களை தெரிந்துகொண்ட தேவன், பாதி வழியில் உங்களை விட்டு விடுகிறவரல்ல. பரிசுத்தத்தின் நற்கிரியையை உங்களில் ஆரம்பித்த அவர், அது பூரணமடையும்படி உங்களை வழிநடத்துவார்.
தேவகுமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக உங்களை மாற்றுகிறதுதான் தேவனுடைய நோக்கம். வேதம் சொல்லுகிறது, “நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்து கொண்டார்” (உபா. 7:6).
பரிசுத்தமுள்ள தேவனை நீங்கள் தேவனாய் கொண்டிருப்பதும், உங்களை பரிசுத்தமாக்குகிற தேவனை பரிசுத்த அலங்காரத்துடனே துதிப்பதும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியம் அல்லவா? நீங்கள் பரிசுத்தமாய் வாழ வாஞ்சிக்கும்போது, கர்த்தர் எல்லாவிதத்திலும் உங்களுக்கு உதவி செய்ய ஆவலுள்ளவராயிருக்கிறார். பிள்ளை வளருவதைப் பார்க்கும்போது, பெற்றோருக்கு அதிக சந்தோஷம் ஏற்படுகிறது அல்லவா? சற்று சிந்தித்துப் பாருங்கள். பரிசுத்த வாழ்க்கையை விட்டுவிட்டால் அசுத்தங்களைத்தான் பற்றிப் பிடித்துக் கொள்ள நேரிடும். அசுத்தத்தில் வாழ்ந்தால் நித்தியத்தை எங்கே செலவழிப்பது? தேவபிள்ளைகளே, தொடர்ந்து பரிசுத்தமாயிருக்க எந்த தியாகத்தையும் செய்ய ஆயத்தமாயிருங்கள்.
நினைவிற்கு:- “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேதுரு 1:15).