No products in the cart.
ஜூலை 30 – சில்வானுவின் உண்மை!
“எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்” (1 பேதுரு 5:12).
“சில்வானு” என்ற அறியப்படாத சகோதரனைக் குறித்து வேதத்தில் வாசிக்கலாம். பேதுரு, சில்வானு என்ற அந்த சகோதரனைப் பற்றி சாட்சி கொடுத்து, “உண்மையுள்ள சகோதரன்” என்று கூறுகிறார். வேதத்தில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளுகிற இந்த சகோதரனைக் குறித்து நீங்கள் அதிகமாய் தெரிந்துக் கொள்ளாவிட்டாலும், அவர் உண்மையுள்ளவர் என்று அழைக்கப்படுவது இருதயத்தை மகிழ்விக்கிறது. ஆகவே அவருக்கு வேதத்தில் நீங்காத இடம் கிடைத்தது.
இன்று கர்த்தர் உண்மையுள்ளவர்களைத் தேடுகிறார். பூமியெங்கும் அவருடைய கண்கள் உலாவுகின்றன. உண்மையுள்ளவர்களுக்கு தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தும்படி கவனித்துக் கொண்டேயிருக்கின்றன. சாலொமோன் ஞானி கேட்கிறார்; “உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?” (நீதி. 20:6).
நீங்கள் வாழும் இந்த நாட்களிலே உண்மையுள்ளவர்களாய் நடப்பது சற்று கடினமாக தோன்றலாம். உங்கள் மேலதிகாரிகள் பொய்யான, கள்ள கணக்குகளை எழுதச்சொல்லி உங்களை வற்புறுத்தக்கூடும். மனச்சாட்சிக்கு விரோதமாய் பொய் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தங்கள் வரக்கூடும். ஆனால் கர்த்தருடைய கண்களோ உண்மையுள்ளவர்களைக் கவனித்துக் கொண்டேயிருக்கிறது.
ஒரு சகோதரன் சொன்னார், ‘என்னுடைய கடையில் பீடி, சிகரெட்டுகள், லாகிரி வஸ்துக்கள் வைத்திருந்தால் என் வியாபாரம் எவ்வளவோ தழைத்து இருந்திருக்கும். ஆனால் நான் கர்த்தருக்கு உண்மையுள்ளவனாக இருக்க விரும்பினேன். ஆகவே தேவனுக்கு பிரியமில்லாதவைகளை என் கடையை விட்டு அகற்றி, “கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்” என்கிற போர்டை என் கடையிலே வைத்திருக்கிறேன். கர்த்தர் என்னை ஆசீர்வதிக்கிறார்’ என்றார்.
இன்னொரு சகோதரன் சொன்னார்: “நான் போலீஸ் இலாகாவிலே பணியாற்றுகிறேன். நான் உண்மையாய் நடக்கிறதினிமித்தம் நான் ஏளனத்திற்கும், பரிகாசத்திற்கும் ஆளானேன். இந்த இலாகாவில் உண்மையாய் பணியாற்ற முடியுமா அல்லது ராஜினாமாதான் செய்ய வேண்டுமா என்றெல்லாம் கலங்கினேன். ஆனால் என் உண்மையை கண்ட கர்த்தர் இந்த போலீஸ் இலாகாவிலே என்னை உயர்த்தியிருக்கிறார்” என்றார்.
பல வேளைகளில் உங்களுடைய உண்மைத் தன்மைக்கு சோதனைகள் ஏற்படலாம். நீங்கள் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாயிருந்தால் கர்த்தர் உங்களை அநேகத்தின்மேல் அதிகாரியாய் வைப்பார். வேதம் சொல்லுகிறது, “உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்” (1 கொரி. 4:2).
நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கிறது மாத்திரமல்ல, உண்மையுள்ளவர்களை காணும்போது அவர்களை உற்சாகப்படுத்தவும் செய்யுங்கள். ‘உண்மையிலே உத்தமமாய் இருங்கள். சோர்ந்து போகாதிருங்கள். ஏற்ற காலத்திலே உயர்த்துவார்’ என்று சொல்லி, ஒருவரையொருவர் திடப்படுத்தி உற்சாகப்படுத்துங்கள். தேவபிள்ளைகளே, எந்தச் சூழ்நிலையிலும், எந்த சோதனையிலும் உண்மையைக் காத்துக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை மேன்மையாய் உயர்த்தும் காலம் மிகவும் சமீபமாயிருக்கிறது.
நினைவிற்கு:- “ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” (வெளி. 2:10).
