No products in the cart.
ஜூலை 13 – இரட்சிப்பின் காலம்!
“நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்” (சங். 106:5).
இந்தக் கடைசி நாட்கள், தேவன் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து இரட்சிப்பை இலவசமாய் அருளும் நாட்கள். ‘உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்’ என்று தாவீது ஜெபிக்கிறதைப் பாருங்கள்.
இந்த கடைசி நாட்களில் கர்த்தர் ஏராளமான தேவ ஊழியர்களை எழுப்பியிருக்கிறார். எங்கும் இரட்சிப்பின் செய்தியும், வருகையின் செய்தியும், மீட்பின் செய்தியும் அறிவிக்கப்படுகின்றன. பரிசுத்த ஆவியின் பின்மாரியின் மழையானது தேசமெங்கும் ஊற்றப்படுகிறது. எண்ணற்ற ஜெபவீரர்களை கர்த்தர் எழுப்பி, ஜனத்தை தம் வருகைக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். இயேசு சொன்னார், “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” (மத். 24:14). வருகையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று சுவிசேஷப் பெருக்கமாகும்.
என்னுடைய தகப்பனார் முழு நேரமாய் கர்த்தருடைய சுவிசேஷத்தை பிரசங்கிப்பவராக மாறுவார் என்று ஒரு நாளும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வருமானவரி இலாகாவிலே பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய தாயாரும் அரசாங்கத்திலே, வருவாய்த் துறையிலே பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் கர்த்தர் அவர்களுக்கு தரிசனமாகி, அவர்களை ஊழியத்திற்கு அழைத்தபோது, குடும்பமாக கர்த்தருடைய முழு நேர ஊழியத்திற்கு வந்தார்கள். அவர்களால் சுமக்க முடியாத ஊழிய பளுவை கர்த்தர் கொடுத்தார். இரவும் பகலும் புத்தகங்களை எழுதி, உபவாசக்கூட்டங்களை நடத்தி, சுவிசேஷப் பணியையும் செய்தார்.
வேதம் சொல்லுகிறது, “அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்” (அப். 17:30). முந்திய காலங்கள் அறியாமையின் காலங்களாய் இருந்தது. நம்முடைய முற்பிதாக்கள் அறியாமையின் இருளிலே விக்கிரகங்களை வழிபட்டு வந்தார்கள். கர்த்தர் மனமிரங்கி வெளிநாட்டிலிருந்து மிஷனெரிகளைக் கொண்டு வந்து, நம் தேசத்து மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்தார்.
ஆனால் இப்பொழுதோ நீங்கள் ஆண்டவரைக் குறித்தும், அவருடைய வருகை மிகவும் சமீபம் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள். ஆகவே கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று முடிந்த வரையிலும் கர்த்தருடைய ஊழியத்தை செய்ய ஒப்புக்கொடுப்பீர்களாக!
ஒரு நாளையாவது வீணாக்கி விடாதிருங்கள். “அணை கடந்த வெள்ளம் அழுதாலும் திரும்ப வராது”. அப்படியே உங்களுடைய வாழ்க்கையிலே வீணாக்கி போட்ட நாட்களும், சோம்பலாய் ஏனோ தானோ என்று வாழ்ந்த நாட்களும் உங்களுக்குத் திரும்ப கிடைப்பதில்லை. “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்ளுவோம்?” (எபி. 2:4).
தேவபிள்ளைகனே, பரலோகத்திற்கு செல்லும்போது வெறும் கையோடு அல்ல, ஆயிரமாயிரமான ஆத்துமாக்களோடு செல்ல உறுதியான தீர்மானம் எடுங்கள்.
நினைவிற்கு:- “இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” (2 கொரி. 6:2).
