bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
AppamAppam - Tamil

ஜூன் 29 – ஆதியிலே வானம்!

“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:1).

தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், ராஜாதி ராஜாவுமாயிருக்கிற நம்முடைய தேவனை வேதம், “வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தவர்” என்றே முதன் முதலில் அறிமுகப்படுத்துகிறது. ஆதியிலே வானத்தை சிருஷ்டித்தவர் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார் (ஆதி. 1:8). ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகும்படிச் செய்தார். அப்படியே சூரியன், சந்திரன், நட்சத்திரங்களெல்லாம் சிருஷ்டிக்கப்பட்டன.

அதே தேவனை, இயேசு கிறிஸ்து அறிமுகம் செய்யும்போது, “பரமண்டலங்களிலிருக்கிற பிதா” என்றும், “பரம பிதா” என்றும் அறிமுகப்படுத்தினார். “பரம பிதா” என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டிலே ஒருமுறைகூட வரவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் அவரை அன்புள்ள பிதாவாக அறியவில்லை. பெரும்பாலான நேரங்களில் அவரை நியாயத்தீர்ப்பின் தேவனாகவே பார்த்தார்கள். சீனாய் மலையில் கர்த்தர் இறங்கின காட்சி பயந்து நடுங்குகிறதாய் இருந்தது. இடி முழக்கங்கள் தோன்றின. மின்னல்கள் பளிச்சிட்டன. மலை  முழுவதும் புகைக் காடாய் விளங்கினது.

ஆனால், புதிய ஏற்பாட்டிலே, நீங்கள் ஒவ்வொருவரும் அவர் மேல் அன்பு கொண்டு, அவரை விசுவாசிக்கும்போது, அவருடைய பிள்ளைகளாகிறீர்கள். பிதாவே என்று அன்புடனும், பாசத்துடனும், உரிமையுடனும் அவரை கூப்பிடுகிறீர்கள். “அப்பா, பிதாவே” என்று அழைக்கிற புத்திர சுவிகார ஆவியையும் கர்த்தர் கிருபையாய் தந்திருக்கிறார் (ரோமர் 8:15, கலா. 4:6). அவர் தாம் பூமியிலே சகல ஜீவராசிகளையும் சிருஷ்டித்த பிதாவாய் இருக்கிறார். அண்டசராசரங்களாகிய முழு குடும்பத்திற்கும் அவரே பிதாவானவர்.

குழந்தை வளர்ந்து தகப்பனைப்போல மாறுகிறது. அதுபோல நீங்களும்கூட பரலோக பிதாவின் குணாதிசயத்திலே, சுபாவத்திலே வளர வேண்டும். இயேசு சொன்னார், “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (மத். 5:48).

உலகத்தில் எந்த சிருஷ்டிப்புக்கும் இல்லாத பெரிய மேன்மையை பரம பிதா உங்களுக்குத் தந்திருக்கிறார். உங்களை தம்முடைய சாயலாய் சிருஷ்டித்து, தம்முடைய ரூபத்தைக் கொடுத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் மூலமாக உங்களோடு ஐக்கியம் கொள்ளுகிறார். நீங்கள் சகல ஜீவராசிகளைப்பார்க்கிலும், தேவதூதர்களைப்பார்க்கிலும் விசேஷித்தவர்களாய் இருக்கிறீர்கள்.

“ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்” (மத். 6:26,31,32).

நினைவிற்கு:- “பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்” (லூக்கா 11:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.