No products in the cart.
ஜூன் 11 – அசைவாடும் ஆவியானவர்!
“பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்” (ஆதி. 1:2).
ஒழுங்கின்மையும், வெறுமையும், இருளுமாய் இருக்கக்கூடிய இடங்களில் இன்றைக்கும் ஆவியானவர் அசைவாடிக்கொண்டிருக்கிறார். அந்த சூழ்நிலையை மாற்றி, ஒழுங்கையும், நிறைவையும், வெளிச்சத்தையும் அவர் நிச்சயம் கட்டளையிடுவார்.
இன்றைக்கு உங்களுடைய வீடும்கூட ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்தால், ஆவியானவரை அன்போடு அழையுங்கள். “ஆதியிலே ஜலத்தின் மேல் அசைவாடின ஆவியானவரே, இன்றைக்கு எங்கள்மேல் அசைவாடி தேவ சந்தோஷத்தையும், சமாதானத்தையும் கொண்டு வாரும்” என்று கேளுங்கள். வேதம் சொல்லுகிறது. “நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்” (சங். 104:30).
ஆவியானவர் அசைவாடுவது, ஒரு பறவை முட்டையிட்டு அதன்மேல் அன்போடு அடைகாக்கிறதற்கு ஒப்பாகக் கூறலாம். அடைகாக்கும் போது, அந்த வெப்பத்தினால், முட்டைக்குள்ளிருக்கும் உருவமற்ற திரவத்திற்குள் அழகான உருவமுள்ள குஞ்சு உருவாகிறது. அது மனிதனுடைய புத்திக்கு எட்டாதது. அதுபோல, வெறுமையான நிலைமையிலிருந்து, கர்த்தர் மகா மகிமையான ஒன்றை சிருஷ்டிக்க அசைவாடுகிறார்.
ஆவியானவரை முதன்முதலாக ஆதியாகமம் 1:2-ல்தான் சந்திக்கிறோம். அப்பொழுது கிரியை செய்ய ஆரம்பித்த ஆவியானவர், வெளிப்படுத்தல் 22:17-ம் வசனம் வரையிலும் கிரியை செய்கிறதைக் காணலாம். அவர் கிரியை செய்யும்போது, அங்கே ஜீவன் உண்டாகிறது. சிருஷ்டிப்பின் வல்லமை வெளிப்படுகிறது. அதே நேரம் அவர் கிரியை செய்யாமல் போனால் ஒழுங்கின்மையும், வெறுமையும், இருளும் மீண்டும் வந்துவிடும்.
ஆதியிலே, இயற்கையின்மேல் அசைவாடின ஆவியானவர், பிற்பாடு மனிதர் மேலும் அசைவாட ஆரம்பித்தார். அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்துப்போய் இருந்த மனிதனை உயிர்ப்பிக்க அசைவாடினார். வேதம் சொல்லுகிறது, “ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது” (யோவான் 6:63). கர்த்தர் உலகத்தில் எந்த மனுஷனையும் உயிர்ப்பித்து, திடப்படுத்தி, பெலப்படுத்தி அவர்களுடைய வாழ்க்கையில் ஒழுங்கையும் நிறைவையும் வெளிச்சத்தையும் கொண்டு வர வல்லவராய் இருக்கிறார்.
இயற்கையின்மேலும் அசைவாடினவர், தனி மனிதன்மேலும் அசைவாடினவர், இன்று சபைகள்மேலும் அசைவாடிக்கொண்டிருக்கிறார். வெளி. 2ம் மற்றும் 3ம் அதிகாரங்களிலே, “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று ஏழு முறை சொல்லப்பட்டிருக்கிறது. உங்களுக்கு ஆவியானவருடைய சத்தத்தைக் கேட்கக்கூடிய காதுகள் இருக்குமானால், அவருடைய மெல்லிய குரலைத் தெளிவாய்க் கேட்கலாம். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய ஆவியானவர் உங்கள்மேலும் அசைவாடி உங்களை ஆசீர்வதிப்பாராக.
நினைவிற்கு:- “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோமர் 8:26).