bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
AppamAppam - Tamil

Sep – 23 – கடைசி காலத்தில்!

“அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்” (மத். 24:10). நீங்கள் கடைசிக் காலத்திற்குள், துன்மார்க்கங்கள் தலை விரித்தாடுகிற நாட்களுக்குள், விசுவாச துரோகம் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்துக்குள் வந்திருக்கிறீர்கள். ‘கடைசிக் காலத்தில் ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்’ என்று வேதம் சொல்லுகிறது. இந்தப் பகைக்குக் காரணமென்ன? ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதின் அடிப்படையென்ன? அன்புக் குறைதலேயாகும். கடைசிக் காலத்தில் அன்பு குறைவுப்பட்டுப் போகிறது. ஜனங்கள் ஆதி அன்பை விட்டுவிடுகிறதினாலே ஒருவரையொருவர் பகைக்கிறார்கள். உள்ளத்தில் தெய்வீக அன்பு இருக்குமென்றால் அன்பு திரளான பாவங்களை மூடுமல்லவா? (1 பேது. 4:8; நீதி. 10:12). ஒருவன் குற்றத்தில் அகப்பட்டால் அவனை என்ன செய்ய வேண்டும்? குற்றவாளியின் குற்றத்தை தூற்றித் திரிய வேண்டுமா? அல்லது குற்றவாளியை சும்மா விட்டு விட வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? தூற்றவும் கூடாது; சும்மா விட்டு விடவும் கூடாது. அவன் தனித்திருக்கும்போது தெய்வீக அன்போடு அவன் அருகிலே சென்று அவன் குற்றத்தை உணர்த்த வேண்டும். அவனுடைய கரம் கோர்த்து, கண்ணீரோடு அவனுக்காய் ஜெபித்து அவனுடைய ஆத்துமாவைக் கர்த்தரண்டைத் திருப்பிக் கொள்ள வேண்டும். அவன் அப்படியும் மனந்திரும்பாவிட்டால் நீங்கள் அவனை விட்டு அமைதியாய் விலகி விட வேண்டியதுதான். உங்களுக்கு அவன் செவிகொடுக்காமல் போனாலும் குற்றவாளியின் குற்றத்தைத் தூற்றுவது உங்கள் தொழிலாக இருக்க வேண்டாம். ஒருபோதும் அவன் சபைக்குப் புறம்பாக்கப்பட்டு அவமானமடைய வேண்டுமென்று எண்ண வேண்டாம். அவனுடைய அழிவையல்ல; அவன் திரும்பி வருதலையே நீங்கள் எதிர்பார்க்க வேண்டும் (யாக். 5:19,20). கர்த்தருடைய ஊழியங்களில் பரிசுத்தக் குலைச்சலான காரியங்களை அறவே அனுமதிக்கக்கூடாது என்பதும் உண்மைதான் ஒருவனுடைய பாவத்தை உலகத்திற்கு எடுத்துக்கூறி தூற்றி நடப்பதைக் கர்த்தர் வெறுக்கிறார். அப்படி ஒருவன் செய்ய துணிவானென்றால் அவன் கர்த்தருடைய ஆக்கினைக்கும் சாபத்திற்கும் தப்பான். அப். பவுல், “மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை” (ரோம. 2:1) என்று எச்சரிக்கிறார். நோவாவின் வாழ்க்கையிலுள்ள ஒரு சம்பவத்தைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அவன் திராட்சை ரசத்தால் வெறித்து நிர்வாணியாய்ப் படுத்திருந்தபோது அவனுடைய குமாரராகிய சேமும் யாபேத்தும் அவனுடைய நிர்வாணத்தை மூடினார்கள். ஆனால் நோவா தன் குற்றத்தை வெளிப்படுத்தித் தூற்றி திரிந்த தன் குமாரனாகிய காமின் செயலைக் கண்டு வேதனையால் நிரம்பி, கானான் சந்ததியைச் சபித்தான். இதனால் காமின் குமாரனாகிய கானான் சபிக்கப்பட்டவனாய் வாழ்ந்தான். தேவபிள்ளைகளே, நீங்கள்கூட இப்படிப்பட்ட காரியங்களில் கவனமாக இருக்கவேண்டும். கர்த்தரின் கிருபையை நீங்கள் தொடர்ந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் தாழ்மையாக நடந்துகொள்ளுங்கள். நினைவிற்கு :- “நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?” (மத். 7:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.