AppamAppam - Tamil

Sep – 21- கர்த்தரை உயர்த்துங்கள்!

“நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்” (சங். 99:5). வேதம் முழுவதிலும் கர்த்தரால் உயர்த்தப்பட்ட பரிசுத்தவான்களுடைய வாழ்க்கையை நீங்கள் வாசிக்கலாம். அவர்கள் அப்படி உயர்ந்ததின் இரகசியங்களையும் அறிந்துகொள்ளலாம். அந்த வழியைப் பின்பற்றும்போது, உங்களுடைய வாழ்க்கையும் நிச்சயமாகவே உயர்வடைந்து ஆசீர்வாதமாக இருக்கும். என்னை பிரமிக்க செய்கிற உயர்வு ஒன்று உண்டென்றால் அது தாவீதை கர்த்தர் உயர்த்தின உயர்வுதான். ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனாயிருந்த தாவீது, இஸ்ரவேலின் ராஜாவாய் உயர்த்தப்பட்டார். மட்டுமல்ல, கர்த்தர் தாவீதை ஆவிக்குரிய பிரகாரமாகவும் அதிகமாக உயர்த்தினார். தாவீது பெரிய ராஜாவாக மாத்திரமல்ல, பெரிய தீர்க்கதரிசியாகவும் விளங்கினார். கர்த்தர் மேல் அளவில்லாத அன்பும் வைத்திருந்தார். தாவீதின் உயர்வுக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அது அவர் தன்னை உயர்த்தினவரை கனம் பண்ணி உயர்த்தியதேயாகும். தன்னை உயர்த்தி, கனம் பண்ணி, மகிமைப்படுத்துகிறவர்களை அவரும் நிச்சயமாக உயர்த்தி, கனம் பண்ணி மகிமைப்படுத்துவார். நீங்கள் பூமியிலும் கர்த்தரை உயர்த்துவீர்கள். நித்தியத்திலும் அவரை உயர்த்துவீர்கள். அவர் ஒருவரே உயர்த்தப்பட வேண்டிய உன்னதமானவர். அவர் ஒருவரே உங்களை உள்ளன்போடு நேசிக்கிறவர். அவர் ஒருவரே உங்களில் அன்புகூர்ந்து, ராஜாக்களும் ஆசாரியர்களுமாக உயர்த்தினவர். புறஜாதியார் கர்த்தரை இகழுகிறார்கள். சாத்தானும் அவனுடைய சேனைகளும் அவருடைய நாமத்தை இகழுகிறார்கள். ஆனால் அவருடைய பிள்ளைகளாகிய நீங்கள் அவரை என்றென்றுமாய் உயர்த்த கடமைப்பட்டிருக்கிறீர்கள். தாவீது, “ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக” (சங். 107:32) என்று சொல்லுகிறார். விசுவாசிகள் கூடிவரும்போதெல்லாம் கனத்தையும், மகிமையும் கர்த்தருக்கு செலுத்தி அவருடைய நாமத்தை உயர்த்துங்கள். அவர் செய்த அற்புதங்கள், அதிசயங்களையெல்லாம் தியானித்து தியானித்து அவரை உயர்த்துங்கள். தாவீது சொல்லுகிறார்: “என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக” (சங். 34:3). தமிழ்நாட்டில் ஒரு பழங்காலத்து பாடல் ஒன்று உண்டு. வரப்பு உயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும். நெல் உயர கோன் உயரும். கோன் உயர குடி உயரும் என்பார்கள். அதுபோல ஆவிக்குரிய ஜீவியத்தில் நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு கர்த்தரை உயர்த்துகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உயருவீர்கள். கர்த்தரை உயர்த்தாமல் தன்னைத்தான் உயர்த்திக் கொள்ளுவதோ அல்லது பிற மனிதரை உயர்த்துவதோ கர்த்தருக்கு பிரியமானதல்ல. தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரை உயர்த்தி அவருக்கு முன்பாக தாழ்மையோடு நடந்துகொள்ளும்போது, கர்த்தர் ஏற்ற காலத்தில் நிச்சயமாகவே உங்களை உயர்த்தியருளுவார். நினைவிற்கு :- “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள், அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்” (1 சாமு. 2:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.