No products in the cart.
ஜூன் 02 – வேத வசனத்தால் ஆறுதல்!
“அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது” (சங். 119:50).
தேவன் நமக்கு அருளிய சொல்லிமுடியாத ஈவுகளில், மிகுந்த ஆறுதலைத் தரும் வேதவாக்கியங்களும் ஒன்றாகும். தாவீது ராஜா, தன்னை வேத வசனங்கள் உயிர்ப்பித்ததாகக் கூறுவதைப் பாருங்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் நானூறு வருடங்களுக்கு மேலாக எகிப்து தேசத்திலே சிறுமைப்பட்டதைக் கர்த்தர் கண்ணோக்கிப் பார்த்தார். “நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன்” (யாத். 3:17) என்று வாக்களித்தார்.
அவர் வாக்களித்தபடியே, இஸ்ரவேலரைக் கானானுக்குள் கொண்டுபோனபோது, அவர்களுடைய சிறுமை மாறினது. செழுமையினால் சந்தோஷம் வந்தது. சிறுமைப்பட்டவர்களுக்குக் கர்த்தர் உதவி செய்ததுபோல நீங்களும் உதவி செய்யுங்கள். வேதம் சொல்லுகிறது, “சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்” (சங். 41:1).
எப்படி கவலை ஒரு மனிதனின் வாழ்க்கையை ஒடுக்குகிறது என்பதற்கு விளக்கம் சொல்லித்தான் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியதில்லை. நீங்களே ஆயிரக்கணக்கான சம்பவங்களைப் பார்த்திருப்பீர்கள். வேதம் சொல்லுகிறது, “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும். நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்” (நீதி. 12:25).
நீங்கள் வேதத்தைத் திரும்பத் திரும்ப வாசிக்கும்போது, அதிலுள்ள வாக்கியங்கள் எல்லாம் உங்களுடைய இருதயத்தை ஆறுதல்படுத்துகின்றன. உங்கள் கவலைகளை மறக்கச்செய்கின்றன. ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் அது உங்களுடைய துக்கங்களை நீக்கி உங்களைப் பரவசப்படுத்துகிறது. தாவீது சொல்லுகிறார், “அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல்; உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது” (சங். 119:50).
வேதம் முழுவதையும் வாசித்து முடிக்க ஏறக்குறைய நாற்பது மணி நேரங்கள் ஆகும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வாசித்தால் நாற்பது நாளில் வேதம் முழுவதையும் வாசித்துவிடலாம். இரண்டு மணி நேரம் வாசித்தால் இருபது நாட்களுக்குள்ளாக வேதத்தை வாசித்து முடித்துவிடலாம்.
கர்த்தருடைய வேதத்திற்கென்று நீங்கள் அதிக நேரத்தை ஒதுக்குவீர்களேயானால் அது நிச்சயமாகவே உங்களுடைய உள்ளத்தை ஆறுதல்படுத்தும், உற்சாகப்படுத்தும், ஆவிக்குரிய வாழ்க்கையைத் தட்டி எழுப்பிவிடும்.
அப். பவுல் எழுதுகிறார்: “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்கு போதனையாக எழுதியிருக்கிறது” (ரோமர் 15:4). தேவபிள்ளைகளே, வேத வாசிப்புக்கென கூடுதலான நேரத்தை ஒதுக்கி வேதம் முழுவதையும் வாசியுங்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தரும்.
நினைவிற்கு:- “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங். 119:105).