No products in the cart.
மே 23 – உண்மையும், பொய்யும்!
“பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்” (நீதி. 12:22).
பொய் பேசுவது என்பது இன்றைக்கு சர்வசாதாரணமாகிவிட்டது. பிரச்சனைகளிலிருந்து விடுபட மனிதர்கள் தாராளமாய் பொய் சொல்லுகிறார்கள். ஆயிரம் பொய்யைச் சொல்லியாகிலும் ஒரு திருமணத்தை செய்துவிடு என்பது நம் தேச பழமொழி. மற்றவர்களுக்கு நன்மை உண்டாகப் பொய் பேசினால் அதில் தவறில்லை என்றுகூட சிலர் வாதிக்கிறார்கள்.
ஆனால், “பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்” என்று வேதம் சொல்லுகிறது. அதன்படி, பொய் பேசுகிறவர்களும்கூட கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்தான். சிலர் வாயைத் திறந்தால்போதும், குற்றால அருவியிலே வெள்ளம் கொட்டுவதுபோல பொய்யானது கொட்ட ஆரம்பித்துவிடுகிறது. சிலர் அப்பட்டமான பொய் பேசுகிறார்கள். சிலர் துணிகரமான பொய்களைப் பேசுகிறார்கள்.
ஆனால் வேதம் எச்சரிக்கிறது, “பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்” (வெளி.21:8). பொய் பேசுகிற நாவைக் குறித்து அப். யாக்கோபு எச்சரித்தார். “நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது” (யாக்.3:8).
பொய்யை மேற்கொள்ளுவதற்கு உபவாசமிருந்து ஜெபியுங்கள். கர்த்தருடைய கிருபையைக் கேளுங்கள். நாவைப் பரிசுத்தமாய் பாதுகாத்துக்கொள்வதற்கு சில முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளுங்கள். வேதம் சொல்லுகிறது, “துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்” (ரோமர் 13:14).
கர்த்தர் உண்மையுள்ளவர் மட்டுமல்ல, உண்மையாய் நடக்கிறவர்கள்மேல் பிரியம் வைக்கிறார். யோசேப்பை ஆண்டவர் நேசித்து, அன்பு செலுத்தி, உயர்த்தியதற்கு காரணம் என்ன? அவரிடத்தில் காணப்பட்ட உண்மையேயாகும். முழு எகிப்தின்மேலும் கர்த்தர் அவரை அதிகாரியாக உயர்த்தினார்.
ஆனால் யோசேப்புடைய சகோதரர்களைப் பாருங்கள். அவர்கள் துணிந்து தகப்பனிடத்தில் பொய் சொன்னார்கள், தன் சகோதரன் அங்கியிலே ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைத் தோய்த்து ‘உம்முடைய மகனை கொடிய மிருகம் பட்சித்திருக்கும். இதோ, அவனுடைய கிழிந்த அங்கி’ என்று துணிகரமாய் பொய் சொன்னார்கள். இதன் விளைவாக அவர்கள் யோசேப்பின் முன்பாகப் பணிந்து, தலைகுனிந்து நிற்க வேண்டியதாயிற்று.
பொய் சொல்லவேண்டிய சூழ்நிலைகள் வரக்கூடும். பொய் சொன்னால் தப்பிவிடலாம் என்று பலரும் துர்ஆலோசனை சொல்லக்கூடும். ஆனால் கர்த்தருடைய கண்களோ உண்மை பேசுகிறவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. உண்மையை விரும்பின ஆண்டவர் ஆபிரகாமை அழைத்தபோது, ‘நீ எனக்கு முன்பாக நடந்து உத்தமனாயிரு’ என்று சொன்னார்.
தேவபிள்ளைகளே, பொய்யை வெறுத்து உண்மையை சிநேகிக்கிறவர்கள் நிச்சயமாகவே கர்த்தருக்குப் பிரியமானவர்களாயிருப்பார்கள்.
நினைவிற்கு:- “ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே” (கொலோ. 3:9,10).