Appam, Appam - Tamil

மே 21 – கீர்த்தியும், புகழ்ச்சியுமான மேன்மை!

“பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்” (செப். 3:20).

“உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைப்பேன்” என்பதே கர்த்தர் இன்று உங்களுக்குக் கொடுக்கும் வைராக்கியமான வாக்குத்தத்தமாய் இருக்கிறது. உங்களுடைய விரோதிகள் உங்கள் பெயருக்கு அவகீர்த்தி உண்டுபண்ண நினைக்கலாம். உங்களைத் தூற்றித் திரியலாம்.

ஆனால், கர்த்தர் உங்களுடைய பட்சத்தில் இருக்கிறபடியினால், அவர் சத்துருக்களுடைய சதி ஆலோசனைகளையெல்லாம் நிர்மூலமாக்கி, நிச்சயமாகவே உங்களை, “கீர்த்தியும், புகழ்ச்சியும், மேன்மையுமாய்” வைப்பார்.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தாரை வறுமை மிகவும் வாட்டியது. அவர்கள் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார்கள். மிகவும் வேதனைக்குள்ளானார்கள். ஆனால் அவர்களிடம் இருந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ஜெபம். அவர்கள் விடாப்பிடியாக தொடர்ந்து ஜெபித்து ஒரு தொழிலை ஆரம்பித்தார்கள். கர்த்தர் அந்தத் தொழிலை மகா மேன்மையாய் ஆசீர்வதித்தார்.

இன்றைக்கு உறவினர்களின் மத்தியிலே கர்த்தர் அவர்களை உயர்ந்த ஸ்தலத்தில் வைத்திருக்கிறார்.  நான் உன்னை கீர்த்தியும், புகழ்ச்சியுமாய் வைப்பேன் என்று வாக்களித்தபடியே கர்த்தர் அவர்களை ஆவிக்குரிய வகையிலும், உலகப்பிரகாரமாகவும், மேன்மையாக வைத்திருக்கிறார்.

கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி.12:2) என்று சொன்னார். கர்த்தர் சொன்னபடியே ஆபிரகாமை ஆசீர்வதித்தார். ஆபிரகாமுக்கு உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களும் இருந்தன. ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் இருந்தன; உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்களும் இருந்தன; நித்தியமான ஆசீர்வாதங்களும் இருந்தன.

யூதர்களும், இஸ்ரவேலரும் ஆபிரகாமை தங்களுடைய பிதா என்று அழைக்கிறார்கள். முற்பிதாக்களிலே இவர் மூத்தவரும், விசேஷமுமானவர். இஸ்லாமியர்கள் ஆபிரகாமை “இப்ராகீம் நபி” என்றும் “பெரிய தீர்க்கதரிசி” என்றும் அழைக்கிறார்கள்.

புதிய ஏற்பாட்டிலும் இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாற்றை சொல்லும்போது, “ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு” (மத்.1:1) என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர் விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்பட்டார். எபிரெயரின் பிதா என்று அழைக்கப்பட்டார். ஆம், உண்மையாகவே ஆபிரகாமினுடைய பெயரை கர்த்தர் பெருமைப்படுத்தினார்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களையும் இந்த பூமியிலே கீர்த்தியும், புகழ்ச்சியுமாக வைப்பார். வேதம் சொல்லுகிறது, “ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; “எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்” (1 நாளா. 29:12).

நினைவிற்கு:- “அவரே உன் புகழ்ச்சி; உன் கண் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே” (உபா.10:21).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.