bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

மே 18 – ஐந்தாம் நாள்

“நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்” (ஆதி. 1:20).

சிருஷ்டிப்பின் ஐந்தாம் நாளிலே கர்த்தர் விதவிதமான ஜீவஜந்துக்களையும், பறவைகளையும், மீன்களையும் சிருஷ்டித்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். மிக அழகான இனிமையான சிருஷ்டிப்புகள்! பெரிய கழுகு முதல், சிறிய தேன் சிட்டு வரையிலும் எல்லாவற்றையும் கர்த்தர் அருமையாகச் சிருஷ்டித்தார்.

“ஆகாயத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள்” என்றார் இயேசு. அவைகள் கவலைப்படுவதில்லை. நாளைக்கு என்னச் செய்வோம் என்று எண்ணுவதில்லை. கர்த்தரைச் சார்ந்து மகிழ்ச்சியாய் பாடித்திரிகின்றன. அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை. களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை (மத். 6:26).

அதுபோலவே நீங்களும் கர்த்தரை முற்றிலுமாக சார்ந்துகொள்ளுவீர்களாக. ஆகாயத்துப் பறவைகளைப் பிழைப்பூட்டுகிற பரமபிதா நிச்சயமாகவே உங்களையும் பிழைப்பூட்டுவார்.

“அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” என்று இயேசு கேட்கிறார். “இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுவதில்லை” (லூக். 12:6). அவைகளில் ஒன்றாகிலும் பிதாவின் சித்தமில்லாமல் தரையில் விழுவதில்லை (மத். 10:29).

சிறிய அடைக்கலான் குருவிகளின்மேல் கர்த்தருக்கு அவ்வளவு அன்பும் கரிசனையும் இருக்குமானால், தேவசாயலின்படியும், தேவரூபத்தின்படியும் சிருஷ்டிக்கப்பட்ட உங்கள்மேல் கர்த்தர் எவ்வளவு அதிக அக்கறையுள்ளவராயிருப்பார்! ஆம், நீங்கள் கர்த்தரால் மறக்கப்படுவதில்லை.

“சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது” (ஏசா. 49:14-16) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தகைவிலான் குருவிகளைப் பாருங்கள். தாவீது சொல்லுகிறார், “என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே” (சங். 84:3).

குருவிகளும் ஆலயத்திலே கர்த்தரைப் பாடித்துதிக்கிறதை தாவீது கண்டபோது, ‘ஆ, இந்த குருவிகள் கர்த்தருடைய ஆலயத்தை இவ்வளவாய் நேசித்தால் நான் அவருடைய ஆலயப் பிரகாரங்களை எவ்வளவு நேசிக்கவேண்டும்’ என்று எண்ணினார். “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்” (சங். 122:1).

தேவபிள்ளைகளே, ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன் (சங். 84:10) என்று தீர்மானிப்பீர்களா?

நினைவிற்கு:- “பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்” (ஏசா. 31:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.