bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

மே 15 – அன்புகூருதலும், அன்பு கூரப்படுதலும்!

“உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய் பெருகவும் …. வேண்டுதல் செய்கிறேன்” (பிலி. 1:9,11).

ஒரு அநாதை சிறுவர் இல்லத்தின் வாசலில் “அன்புகூரு, அன்பு கூரப்படு” என்ற வார்த்தைகள் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. அதன் விளக்கம் என்ன என்று கேட்டபோது அந்த அநாதை சிறுவர் இல்லத்தின் நிர்வாகி சொன்னார், “எங்களுடைய இல்லத்தில் பல அநாதைக் குழந்தைகளை சேர்த்துப் பராமரித்தோம். நல்ல உணவு, துணிமணி மற்றும் கல்வி ஆகியவற்றைக் கொடுத்தோம்.

ஆனால், பிள்ளைகளுடைய முகத்தில் ஒளியில்லை. சந்தோஷமில்லை. அநேக குழந்தைகள் நோய்வாய்ப்படுவதும் மரிப்பதுமாக இருந்தார்கள். காரணம் என்னவாய் இருக்கக்கூடும் என்று பார்த்ததில், பிள்ளைகளுக்கு பல காரியங்கள் நிறைவாக இருந்தாலும் போதிய அன்பு கிடைக்கவில்லை என்பது அறியப்பட்டது. அன்பு தாழ்ச்சியால்தான் முகத்தில் ஒளி இல்லை என்பதை அறிந்தோம்.

எனவே கிறிஸ்தவத் தாய்மார்களுக்கு அழைப்புக்கொடுத்து, நீங்கள் வந்து பிள்ளைகளை அரவணைத்து அவர்கள்மீது அன்பு செலுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டோம். அப்படியே அருமையான பக்தியுள்ள தாய்மார்கள் அநேகர் வந்தார்கள். தங்களுடைய சொந்த குழந்தைகளைப்போல பிள்ளைகளைத் தூக்கி, அரவணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தார்கள். அருமையான பாடல்களைச் சொல்லிக்கொடுத்து ஜெபித்தார்கள். பிள்ளைகளுடைய முகத்தில் ஒளி வீச ஆரம்பித்துவிட்டது” என்றார்கள்.

உலகமே அன்புக்காக ஏங்குகிறது. பிள்ளைகள் பெற்றோரின் அன்புக்காகவும், பெற்றோர் பிள்ளைகளின் அன்புக்காகவும் ஏங்குகிறார்கள். கணவன் மனைவியின் அன்புக்காகவும், மனைவி கணவனின் அன்புக்காகவும் ஏங்குவதைப் பார்க்கிறோம். உலகத்தை மகிழ்ச்சியோடு இயங்க வைக்கும் மாபெரும் சக்தி அன்பு ஆகும்.

உங்களிடத்தில் மற்றவர்கள் அன்பாய் இருக்கவேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படியென்றால், முதலில் நீங்கள் மற்றவர்களிடத்தில் அன்புகூருங்கள். அப். பேதுருவும் அந்த ஆலோசனையைத்தான் நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறார். “எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புடையவர்களாயிருங்கள்” (1 பேதுரு 4:8) என்று அவர் சொல்லுகிறார்.

கர்த்தரின் கட்டளைகளில் இரண்டு கட்டளைகள்தான் பிரதானமான கட்டளைகள். முதல் முக்கியமான கட்டளை, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக” (மத். 22:37) என்பதாகும்.

இரண்டாவது கட்டளை, “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது” (மத். 22:39,40).

கிறிஸ்துவுக்கு பன்னிரெண்டு சீஷர்கள் இருந்தாலும், யோவான் மட்டுமே அன்பின் சீஷன் என்று அழைக்கப்பட்டார். அவருடைய நிரூபங்களில் எல்லாம் மிகவும் அதிகமாய் வலியுறுத்தப்பட்டது அன்புதான்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய உள்ளத்திலிருந்து அன்பின் பெருவெள்ளம் புறப்பட்டு வரட்டும். அது கர்த்தருடைய உள்ளத்தையும் மகிழ்விக்கும். உங்களைச் சுற்றியுள்ள குடும்பத்தார், நண்பர்களின் உள்ளத்தையும் மகிழ்விக்கும்.

நினைவிற்கு:- “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்” (யோவான் 13:35).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.