No products in the cart.
மே 13 – மேற்கொள்ளுவதில்லை!
“பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை” (மத்.16:18).
‘கடற்கரையிலே, பெரிய பெரிய அலைகள் பயங்கரமாக சீறிக்கொண்டு, கரையை நோக்கி வேகமாக வரும். கரைக்கு வந்த உடனேயே ஏதோ ஒரு தெய்வீக சக்திக்கு கட்டுப்பட்டதுபோல அமைதியாகத் திரும்பச் சென்றுவிடும். ஆயிரம் ஆயிரம் அலைகள் வந்து கரையை மோதியடித்தாலும், கர்த்தர் அவைகளுக்கெல்லாம் ஒரு எல்லையைக் குறித்திருக்கிறார். அதைத் தாண்டி வந்து அவை ஜனங்களை மேற்கொள்ளுவதில்லை.
அதுபோலவே, ஒவ்வொரு கிறிஸ்தவன் மேலும் பயங்கரமான பாதாளத்தின் வல்லமைகள் அலையலையாய் சோதனைகளையும், போராட்டங்களையும் கொண்டுவருகின்றன. ஆனால் கர்த்தர் ஒவ்வொருவருடைய பட்சத்திலும் இருப்பதினால், அந்த பாதாளத்தின் வல்லமைகள் பெலன் இழந்து திரும்பச் சென்றுவிடுகின்றன. கர்த்தர், ‘பாதாளத்தின் வாசல்கள் ஒருபோதும் உங்களை மேற்கொள்வதேயில்லை’ என்று வாக்குத்தத்தம் செய்கிறார்.
பாதாளத்தின் வாசல்கள் உங்களுக்கு விரோதமாகப் போராடுகின்றன. ஒருவேளை உங்களுடைய மாம்சக் கண்கள் அவற்றைக் காணக்கூடாமல் இருக்கலாம். ஆனால் கர்த்தரோ அவற்றைக் கவனித்துக்கொண்டேயிருக்கிறார். அன்று யோபுவைப் பார்த்து, “மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?” (யோபு 38:17). என்று கர்த்தர் கேட்டார். அந்த மரண வாசல்களின் வல்லமைகளிலிருந்து கர்த்தர் உங்களை விடுவித்துப் பாதுகாக்கிறார்.
தாவீதின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர் வாழ்நாளெல்லாம் பாதாளத்தின் வாசல்கள் அவரோடுகூட போராடிக்கொண்டேயிருந்தன. ‘மரணத்துக்கும் எனக்கும் ஓரடி தூரம் மட்டுமே இருந்தது’ என்று தன் அனுபவத்தைக் குறித்து தாவீது சொன்னாலும், அவர் எப்போதும் தன் நம்பிக்கையைக் கர்த்தர் மேலேயே வைத்திருந்தார்.
எசேக்கியா ராஜா ஒருமுறை வியாதிப்பட்டு மரணத் தருவாய்க்குள் வந்துவிட்டார். மரண வாசல்களும், பாதாளத்தின் வாசல்களும் அவர்மேல் அலையாய் மோதியடிக்கிறதை உணர்ந்தார். அந்த வேளையிலே கர்த்தரைப் பார்த்து, “நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன்” (ஏசா. 38:10) என்று துயரத்துடன் கூறினார். ஆனால் கர்த்தரோ அந்த பாதாளத்தின் வாசல்களுக்குள் அவரை விடவில்லை. பாதாளத்தின் வாசல்கள் அவரை மேற்கொள்ள அனுமதிக்கவில்லை.
பாதாளத்தின் வாசல்களின் வல்லமைகளை முறியடிக்க தேவன் வானத்தின் வாசல்களையும், சீயோன் வாசல்களையும் திறந்து வைத்திருக்கிறார். யாக்கோபு, தன் தரிசனத்திலே வானத்தின் வாசல்கள் திறந்து வைக்கப்பட்டு ஒரு ஏணியால் தரையோடு இணைக்கப்பட்டிருக்கிறதைக் கண்டார். அதிலே தேவதூதர்கள் ஏறுகிறதும் இறங்குகிறதுமாயிருக்கிறதையும் கண்டார். மட்டுமல்ல, அந்த ஏணிக்கு மேலாக கர்த்தர் நின்று கொண்டிருந்ததையும் கண்டார். தேவபிள்ளைகளே, மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்த சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உங்கள் பட்சத்தில் நிற்கிறார். அவர் உங்களுக்காக வழக்காடி யுத்தம் செய்கிறார். பாதாளத்தின் வாசல்கள் உங்களை மேற்கொள்ளுவதேயில்லை.
நினைவிற்கு:- “பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; ….ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்” (வெளி. 1:17,18).