No products in the cart.
மே 12 – கேடகமும், பெலனும்!
“கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்” (ஆதி. 15:1).
பயம் என்பது ஒரு பயங்கரமான தீய சக்தி ஆகும். அது சாத்தானின் கொடிய ஒரு ஆயுதம். பயம் என்பது இருதயத்தை சோர்ந்துபோகப்பண்ணும் பிசாசின் கிரியையாய் இருக்கிறது. பயம் வரும்பொழுது அது தனியே வருவதில்லை! கலக்கம், தயக்கம், திகில், கவலை ஆகியவற்றையும் உடன் அழைத்து வருகிறது.
பயத்தின் தீய விளைவுகளைக் குறித்து ஏராளமாய்ச் சொல்லிக்கொண்டே போகலாம். பயத்தினால் சமாதானத்தை இழந்தவர்கள் உண்டு. ஆரோக்கியம் நஷ்டப்பட்டு பெலவீனப்பட்டவர்கள் உண்டு. வாழ்க்கையைத் துரிதமாய் முடித்துக்கொண்டவர்களும் உண்டு.
பயத்தை மேற்கொள்வது எப்படி? தாவீது இராஜா தன் அனுபவத்திலிருந்து எழுதுவதைப் பாருங்கள். “நான் கர்த்தரைத் தேடினேன். அவர் எனக்குச் செவிகொடுத்து என்னுடைய எல்லா பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” (சங். 34:4).
நீங்கள் கர்த்தரைத் தேடும்போது அவர் உங்களண்டை வருகிறதினால் பயம் உங்களைவிட்டு ஓடுகிறது. தேவ பிரசன்னத்தைக் கண்டதும், சூரியனைக் கண்ட பனிபோல பயத்தின் ஆவிகள் ஓடிப்போகின்றன.
பயம் நீங்கியதும் கர்த்தரை விட்டுவிடாதிருங்கள். அநேகர் தலைவலி நேரத்தில் தலைவலி மாத்திரைகளை தேடுவதுபோல, பிரச்சனைகள் நேரத்தில் மட்டுமே கர்த்தரைத் தேடுகிறார்கள். அப்படியல்லாமல் நீங்கள் எப்பொழுதும் கர்த்தரை உங்கள் அருகிலே நிறுத்தி, அவரில் அன்பு கூரவேண்டும்.
வேதம் சொல்லுகிறது, “அன்பிலே பயம் இல்லை; பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்;” (1 யோவா. 4:18).
கர்த்தர் உங்களுடைய அருகிலே நிற்பதைப் பார்க்கும்பொழுது, நீங்கள் தைரியம் கொண்டு, “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன். மனுஷன் எனக்கு என்ன செய்வான்” (சங். 118:6) என்று சொல்லலாமே.
பயம் ஒரு மனுஷனை அடிமைப்படுத்தும். அது அடிமைத்தனத்தின் ஆவி. அந்த அடிமைத்தனமும், பயமும் முறிக்கப்பட வேண்டுமானால், நீங்கள் தேவ ஆவியால் நிரப்பப்படவேண்டும்.
வேதம் சொல்கிறது: “அந்தப்படி திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோமர் 8:15). “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோ. 1:7).
எப்பொழுதும் பரிசுத்த ஆவியினாலே நிரம்பியிருங்கள். அப்படி உங்களை நிரப்ப கர்த்தர் ஆவலாய் இருக்கிறார். எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிற ஆண்டவர், உங்களுடைய பாத்திரத்தை நிரம்பி வழியச்செய்வார்.
தேவபிள்ளைகளே, நிறைவானது வரும்பொழுது குறைவானது ஒழிந்து போவது போல, பரிசுத்த ஆவியானவர் பலமாய் உங்கள்மேல் இறங்கிவரும்பொழுது பயத்தின் ஆவிகள் உங்களைவிட்டு விலகி ஓடிப்போகும்.
நினைவிற்கு:- “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்” (சங். 56:3).