Appam, Appam - Tamil

மே 09 – மேன்மை பாராட்டுவோம்!

“சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுவார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம்” (சங்.20:7).

உலகத்தார் மனமேட்டிமையான காரியங்களிலும், வீண் பெருமைகளிலும் மேன்மை பாராட்டுகிறார்கள். நாமோ, கர்த்தர்பேரில் உள்ள அன்பையே முன்வைத்து மேன்மை பாராட்டுகிறோம். உலகப்பிரகாரமான இராஜாக்களுக்கு இரதங்களும், குதிரைகளும் மேன்மையானவையாக இருக்கின்றன. ஆவிக்குரிய இராஜாக்களாகிய நமக்கோ, கர்த்தருடைய நாமமே மேன்மையானதாய் இருக்கிறது. தாவீது சொல்லுகிறார்: “அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்” (சங். 20:8).

எரேமியா சொல்லுகிறார்: “ஞானி தன் ஞானத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்” (எரே. 9:23).

ஒரு காலத்தில் பிரதான தூதனாயிருந்த லூசிபர், தன் ஞானத்தினால் பெருமையடைந்து விழுந்தான். விழுந்தபோதோ அவன் பிசாசுகளுக்குத் தலைவனானான் (எசேக். 28:16). உலக ஞானத்தினால் பிரசித்திபெற்ற பெரிய விஞ்ஞானிகளெல்லாம், குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்றார்கள்.

ஆனால் அப்படிப்பட்டவர்களின் இறுதிகால வாழ்க்கை மிக வேதனையாக இருந்ததாகவே நாம் காண்கிறோம். வேதம் சொல்லுகிறது, “இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது” (1 கொரி. 3:19). “ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்” (ஏசா. 29:14).

அதுபோலவே தன் பராக்கிரமத்தைக் குறித்து மேன்மைபாராட்டின கோலியாத் ஒரு கூழாங்கல்லினால் கீழே விழவில்லையா? தன் படையைக் குறித்து மேன்மைபாராட்டின அசீரிய ராஜாவாகிய சனகெரிப், தேவதூதனால் கசப்பான பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லையா? எந்த பலவானுடைய பலமும் வியாதிப்படுக்கையிலே குறைந்துபோகும். அவர்களுடைய பராக்கிரமத்தின் மேன்மைபாராட்டுதலும் மரணத்தோடு ஒழிந்து போய்விடும்.

எது உங்களுடைய மேன்மைபாராட்டுதலாய் இருக்கிறது? “மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மை பாராட்டக்கடவன். ….இவைகளின் மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரே. 9:24).

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குக் கல்வியையும், செல்வத்தையும், ஆசீர்வாதமான பிள்ளைகளையும் தரலாம். ஆனால் ஒரு நாளும் உலகப்பிரகாரமான இந்த காரியங்களைக்குறித்து பெருமை பாராட்டிவிடாதிருங்கள். ‘கர்த்தர் எங்களுக்கு கிருபையாய் தந்தவைகள் இவைகள்’ என்று சொல்லி உங்களைத் தாழ்த்தி, உங்களுடைய தாழ்விலே உங்களை உயர்த்தின ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- “மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானர்” (1 கொரி. 1:30, 31).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.