No products in the cart.
மே 04 – மேன்மையான பரமதேசம்!
“அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே” (எபி. 11:16).
உலகப்பிரகாரமான தேசமும் இருக்கிறது. மேன்மையான பரமதேசமும் இருக்கிறது. உலகத்துக்குரிய இராஜ்யமும் இருக்கிறது. நித்தியத்துக்குரிய மகிமையான இராஜ்யமும் இருக்கிறது. உங்களுடைய கண்கள் எப்பொழுதும் மேன்மையான பரம தேசத்தையே நோக்கிப் பார்க்கட்டும்.
கர்த்தர் ஆபிரகாமை அழைத்து, “நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் உன் தகப்பனுடைய வீட்டையும்விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” (ஆதி. 12:1) என்று சொன்னார். ஆபிரகாம் விட்டுவிட்டு வந்த தேசத்தைப் பார்க்கிலும், கர்த்தரால் வாக்களிக்கப்பட்ட கானான் தேசம் மகா மேன்மையான தேசமாயிருந்தது. அது மலைகளும், பள்ளத்தாக்குகளும் உள்ளதும், பாலும், தேனும் ஓடுகிறதுமான தேசமுமாயிருந்தது.
ஆபிரகாமின் கண்கள் உலகப்பிரகாரமான தேசங்களை நோக்கிப்பார்க்கவில்லை. மேன்மையான பரமதேசத்தையே நோக்கிப்பார்த்தது. வேதம் சொல்லுகிறது, “விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து….தேவன்தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்குக் காத்திருந்தான்” (எபி. 11:9, 10).
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு வாழ்ந்த காலங்களிலே பரம தேசம் அவர்களுக்குத் தூரமனதாய் இருந்தது. ஆனால், இன்று காலச்சக்கரம் சுழன்று, உலகத்தின் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிற நமக்கோ பரம தேசம் மிகவும் சமீபமாய் இருக்கிறது. கர்த்தருடைய வருகையும் சமீபமாய் இருக்கிறது. யோவான் ஸ்நானகனும், இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் பிரசங்கம்பண்ணின முக்கியமான வார்த்தை ‘மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது’ என்பதே!
யார் யார் தங்களுடைய கண்களையும், இருதயங்களையும் அந்த பரம தேசத்துக்கு நேராக ஏறெடுக்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்கள் பூமிக்குரிய காரியங்கள்மேல் நாட்டமாயிருப்பதில்லை. வேதம் சொல்லுகிறது “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது” (பிலி. 3:20).
ஆகவே உங்களுடைய நம்பிக்கையையும், சிந்தனையையும் பரலோகத்தின்மேலேயே வைப்பீர்களாக. ஆபிரகாமுக்கு மேன்மையான பரம தேசத்தைக் குறித்த தரிசனம் ஏற்பட்டபோது, பூமியிலே அந்நியனும் பரதேசியுமாக வாழ்ந்தார். கூடாரங்களில் குடியிருந்து, வழிப்போக்கனைப்போல் வாழ்ந்து மோட்சப்பிரயாணம் செய்பவராகத் தன்னை அர்ப்பணித்தார்.
தேவபிள்ளைகளே, பூமிக்குரிய காரியங்கள்மேல் அதிகமான முக்கியத்துவத்தைச் செலுத்தாதேயுங்கள். பணத்தின் மேலும், தொழிலின் மேலும், வேலையின் மேலும் உங்கள் நாட்டம் இருக்கவேண்டாம். நீங்கள் ஒரு அந்நியனும், பரதேசியுமாக இந்த உலகத்தைவிட்டு கடந்துசெல்லவேண்டும். பரலோக சிந்தையும், பரிசுத்த எண்ணமுமே உங்களுக்கு அத்தியாவசியமானவை. மேன்மையானவைகளையே நாடுங்கள்.
நினைவிற்கு: “புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது” (வெளி. 21:2).