No products in the cart.
மே 03 – மேன்மையான பலி!
“விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்” (எபி. 11:4).
கர்த்தருக்கு உகந்ததும், பிரியமுமான பலியை ஆபேல் கர்த்தருக்கென்று செலுத்தியதால் நீதிமான் என்று சாட்சிபெற்றார். இதனாலேயே அவர் இன்றும் பேசப்படுகிறார். காயீனும், ஆபேலும் ஆதாமின் பிள்ளைகள். அதிலே காயீன் விவசாயி ஆனார். ஆபேலோ ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பன் ஆனார். இரண்டு பேருக்கும் கர்த்தருக்குக் காணிக்கை கொண்டுவரவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. அவர்களால் எதைக் கர்த்தருக்கென்று கொடுக்க முடியுமோ அதைக் கொண்டுவந்தார்கள். ஆனால், ஒருவருடைய காணிக்கையைப் பார்க்கிலும் மற்றொருவருடைய காணிக்கை மேன்மையானதாய் விளங்கினது. கர்த்தர் அதை ஏற்றுக்கொண்டார். அடுத்தவருடைய காணிக்கையைப் புறக்கணித்தார். இந்த நிகழ்வை சாதாரணமாகப் பார்க்கும்போது கர்த்தர் பட்சபாதம் உள்ளவர்போல தோன்றக்கூடும்.
ஆனால், நீங்கள் கூர்ந்து கவனித்துப்பார்த்தால் ஆபேலின் காணிக்கை மேன்மையான பலியாக விளங்கியதற்குக் காரணம், ஆபேலின் உள்ளத்தில் இருந்த விசுவாசமே என்பதை அறிந்து கொள்ளலாம். தன்னுடைய விசுவாசத்தைப் பயன்படுத்தி, கர்த்தருக்குப் பிரியமான பலி எது என்பதையும், மேன்மையான பலி எது என்பதையும் ஆபேல் அறிந்து செயல்பட்டார். நீங்கள் கர்த்தருக்கென்று காணிக்கை கொடுக்கும்போது மேன்மையானதையும், கர்த்தருக்குப் பிரியமானதையும், சிறந்ததையும் கொடுக்க வேண்டுமெனத் தீர்மானியுங்கள். விசுவாசத்தினாலே அவருக்குப் பூரணமான பலியை அர்ப்பணித்துவிடுங்கள்.
வேதம் சொல்லுகிறது, “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” (எபி. 11:6).
ஆபேல் கர்த்தருடைய சித்தத்தை கவனமாய் தேடியதுடன் கர்த்தருக்குப் பிரியமானது எது என்பதை அறிந்துகொள்ளவும் முற்பட்டார். அப்பொழுதுதான் ஒரு பெரிய வெளிப்பாடு ஆபேலுக்குக் கிடைத்தது. இயேசுகிறிஸ்து உலகத்தின் பாவத்தை சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்பதையும், முழு உலகத்திற்காகவும் தன்னைத்தானே அர்ப்பணிக்கப் போகிற பாவ நிவாரண பலியான ஆட்டுக்குட்டி என்பதையும், மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டி என்பதையும் தீர்க்கதரிசனமாக அறிந்தார். அவரது விசுவாசக் கண்கள் கண்டபடியே ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்து பலி செலுத்தினார்.
இதனால் கர்த்தருடைய இருதயம் மகிழ்ந்தது. புதிய ஏற்பாட்டுக்காலத்தில் நீங்கள் கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய வேறு ஒரு மேன்மையான பலி உண்டு. “உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமானதுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று வேதம் சொல்லுவதைக் கவனியுங்கள்.
நினைவிற்கு:- “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங். 51:17).